ரயில்கள் தாமதம் தொடர்பாக பயணிகளின் செல்ஃபோனுக்கு ஒரு மாதத்தில் 33 லட்சம் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டதாக ரயில்வே தெரிவித்துள்ளது.
ராஜதானி, சதாப்தி விரைவு ரயில்கள் தாமதமானால், அதில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருக்கும் பயணிகளுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஒருமணி நேரத்திற்கு மேல் தாமதமாகும் போது, குறுஞ்செய்தி மூலம் பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
கடந்த மாதத்தில் தொடங்கப்பட்ட இந்த சேவை மூலம், இதுவரை 33 லட்சம் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 3-ஆம் தேதி முதல் இந்த மாதம் 7-ஆம் தேதி வரை 33 லட்சத்து 9,000 குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், ரயில்வே தனது சொந்த செலவில் இதை செய்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. தாமதம் குறித்து குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கும் இந்த சேவை, மற்ற ரயில்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட உள்ளது.