கனமழை காரணமாக மும்பை நகரம் முடங்கிப் போய் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்றிரவு கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சாலைகளில் தேங்கி நின்றது. குறிப்பாக சியோன் சர்க்கிள், காந்தி மார்க்கெட் பகுதிகளில் தேங்கிய மழை நீர், குளம் போல காட்சியளித்தது.
இதனால், வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், சில இடங்களில் கடும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. ரயில்கள் இயக்குவதில் தடைகள் ஏற்பட்டுள்ளன. ஆகவே பொதுமக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்காக வெளியே செல்வதற்குகூட முடியாத நிலை உருவாகியுள்ளது. அவசரகால தேவைக்காக ரயில்வே நிர்வாகம் சில தொலைப்பேசி எண்களை வெளியிட்டுள்ளது.
இதேபோல பால்கர் மாவட்டத்தில் பெய்த கனமழையால், ரயில் பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், ரயில்களின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.