கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் உள்ள கூட்ட அரங்கில், கடந்த வெள்ளிக்கிழமை முதுநிலை மருத்துவ மாணவி ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. கண்கள், வாய், அந்தரங்க உறுப்புகளில் ரத்தம் கொட்டிய நிலையில், இடது கால், கழுத்து, வலது கை, உதடுகளில் காயங்கள் இருந்தன. உடற்கூறாய்வு அறிக்கையின்படி, அந்த இளம் பெண்மருத்துவர், கொலை செய்யப்பட்ட பின்பே, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.
விசாரணையில், கொலை குற்றவாளி, மருத்துவமனைக்கு அடிக்கடி வந்து செல்லும் காவல் தன்னார்வலர் என்பது தெரியவந்தது. மேலும், கொலை செய்த பின் எந்த பதற்றமும் இல்லாமல், தப்பியோடாமல், ரத்தக் கறைகள் இருந்த உடைகளை துவைத்த அந்த நபர், பின்னர் அருகில் உள்ள காவல்பூத்திற்குச் சென்று நன்றாக உறங்கியிருக்கிறார்.
அந்த நபரின் ஷுவில் அகலாமல் இருந்த ரத்தக் கறைகளைக் கொண்டு அவர்தான் கொலை செய்தவர் என்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர். சம்பவ நாளில் மருத்துவமனையில் பணியில் இருந்தவர்களிடமும் காவல்துறையினர் விசாரித்துவருகிறார்கள். சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்துவருகிறார்கள்.
மேற்குவங்கத்தை அதிர வைத்துள்ள இந்த கொலைச் சம்பவத்தை அடுத்து அந்த மாநிலத்தில் உள்ள முதுநிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்டோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குற்றவாளிக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கி நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவ மாணவியின் கொலையால் சர்ச்சை எழுந்த நிலையில், அந்த மருத்துவக்கல்லுரி மருத்துவமனையின் முதல்வர் சந்தீப் கோஷ் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மருத்துவ மாணவியின் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றுகோரி பொதுநல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதுதொடர்பான வழக்குகள் கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சிவஞானம் அமர்வில், இன்று (ஆகஸ்ட் 13 ) ஆம்தேதி விசாரிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
அரசியல் அழுத்தம் அதிகரித்த நிலையில், கொல்லப்பட்ட மாணவியின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறிய மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, வரும் சனிக்கிழமைக்குள் விசாரணை முடியாவிட்டால், அதன்பிறகு சிபிஐக்கு மாற்ற பரிந்துரைக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும், கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை போராட்டம் தொடருமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவச் சங்கத்தினருடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது இச்சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை வேண்டும், பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மருத்துவச் சங்கனத்தினரால் முன்வைக்கப்பட்டது.
ஆனால், மத்திய அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படாததால், போராட்டம் தொடரும் என மருத்துவச் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், கொல்கத்தா மருத்துவ மாணவி படுகொலைக்கு நீதிக் கேட்டு நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு மருத்துவர்களை அகில இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மேலும், ”கொல்கத்தா சம்பவம் நிர்பயா 2.0 . கொல்கத்தா மருத்துவ மாணவிக்கு நீதி வேண்டி இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் மருத்துவச் சங்கத்தினர் ஈடுபட உள்ளோம். இதனால், ஓபிடி எனப்படும் வெளிப்புற நோயாளிகள் பிரிவில் குறிப்பிட்ட சேவைகளில் மருத்துவர்கள் பணிபுரிய மாட்டார்கள்.
இந்த போராட்டத்திற்கு வலுச்சேர்க்க அனைத்து மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், டீன்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தங்களுடன் கைகோர்க்க வேண்டும். ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளாதால், நாடு முழுவதும் மருத்துவமனைகளில் பல்வேறு பிரிவுகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.