இன்று உலக சுற்றுலாத்தினத்தை பயண விரும்பிகள் பலரும் கொண்டாடி வருகின்றனர். பெரும்பாலான நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு சுற்றுலாத்துறை முக்கியப்பங்கு வகிக்கிறது. அதேபோலத்தான் இந்தியாவிலும். ஆனால் அதேசமயம் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டேதான் வருகிறது. இந்தியாவிற்கு சுற்றுலாவந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செப்டம்பர் 21ஆம் தேதி பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் வாரணாசிக்கு சுற்றுலாப்பயணம் வந்துள்ளார். அன்று அங்கு வீதிகளில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது டூரிட்ஸ்ட் கைடு என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட 35 வயது நபர் ஒருவர் அந்தப் பெண்ணை மூன்று நாட்கள் நகரத்தை சுற்றிப்பார்க்க வழிகாட்டி இருக்கிறார். மூன்றாவது நாள் இரவு, அந்த நபர் பிரான்ஸ் பெண்ணுக்கு குளிர்பானம் வாங்கிக்கொடுத்துள்ளார். அதை குடித்த அந்த பெண் சுயநினைவை இழந்துவிட்டதாகக் கூறுகிறார்.
மறுநாள் காலை அவர் எழும்போது தனது உடலில் ஆடைகள் ஏதுமின்றி நிர்வாணமாக்கப் பட்டிருந்ததைக் கண்டு மோசமாக உணர்ந்ததாகக் கூறுகிறார். மேலும் அடுத்த நாள் தான் பலவீனமாக உணர்ந்ததாகவும், உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டது எனவும் அவர் அளித்த புகாரில் தெரிவித்திருக்கிறார். மேலும், தான் குடித்த பானத்தில் போதைப்பொருள் கலக்கப்பட்டிருந்ததை மறுநாள்தான் அவர் உணர்ந்ததாகவும் கூறியிருக்கிறார். அதன்பிறகு மருத்துவரிடம் சிகிச்சை பெற்றதாகவும் கூறுகிறார். இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வாரணாசி காவல்நிலையத்தில் புகார் ஒன்றையும் கொடுத்திருக்கிறார்.
இதுகுறித்து வாரணாசி போலீஸ் கமிஷ்னர் கூறுகையில், சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட நபரை கண்டறிந்துள்ளதாகவும், குளிர்பானத்தில் போதைப்பொருள் கலந்தது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த நபர் மீது இந்திய சட்டப்பிரிவு 328-இன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.