கர்நாடக அரசு தொடர்ந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என காவிரி ஆணைய கூட்டத்தில் வலியுறுத்த தமிழக அரசு திட்டம் உள்ள தெரிகிறது.
நாளை காவிரி ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் 80 TMC தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என தமிழக பிரதிநிதி வலியுறுத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது. காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகுவது தவறு என்பது சுட்டிக்காட்டப்படும் என்றும், ஜூலை மாதம் 30 TMC தண்ணீரை கர்நாடக திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தப்படும் தமிழக அதிகாரிகள் வலியுறுத்துவார்கள் என தெரிகிறது. அதேபோல் ஆகஸ்ட் மாதத்தில் தமிழகத்துக்கு 50 TMC தண்ணீர் திறந்துவிடவும், காவிரி ஆணையம் உத்தரவிட வேண்டும் என தமிழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்படும் என கூறப்படுகிறது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக ஜூன் மாதத்தில் தமிழகத்துக்கு 11 TMC தண்ணீர் வந்துள்ளது. மாதாமாதம் உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பது தமிழகத்தின் பிரதான கோரிக்கையாக இருக்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆணையம் உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி செயல்படவேண்டும் எனவும் தமிழகம் வலியுறுத்தும் எனவும் புதுச்சேரி அரசும் தமிழகத்தின் முயற்சிகளை ஆதரிக்கும் என தெரிகிறது. நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடத்திய கர்நாடக அரசு அறிவித்துள்ள நடவடிக்கைகளை எதிர்க்கப்படும் எனவும் தமிழகத்தின் பிரதிநிதியாக பொதுப்பணிதுறை முதன்மை செயலாளர் பிரபாகர் காவிரி ஆணைய கூட்டத்தில் பங்கேற்பார் எனவும் தெரிகிறது. புதுச்சேரி சார்பாக அந்த மாநிலத்தின் பொதுப்பணிதுறை செயலாளர் அன்பரசு பங்கேற்க உள்ளார். மத்திய தண்ணீர் வாரியம் தலைவர் மசூத் ஹுசைன் காவிரி ஆணையத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.
ஆணையத்தின் விதிகள், செயற்பாடு முறைகள், கூட்டங்களுக்கான நடைமுறைகள் ஆகியவை நாளைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆணையத்தின் வரவு-செலவு கணக்குகள், மாநிலங்களின் பொறுப்புகள் ஆகியவையும் விசாரிக்கப்பட்டு, ஆணையத்துக்கு நிரந்தர அலுவலகம் அமைப்பது, ஊழியர்களை நியமிப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவுக்கான நடைமுறைகளும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
கர்நாடக அரசு நீதிமன்றம் செல்வதாக காரணம் காட்டி, ஆணையத்தை செயல்பட விடாமல் தடுத்தல் கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டியதாக இருக்கும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கேரளா, கர்நாடகா, தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளும் இக்கூட்டத்தில் மத்திய நீர்வளத்துறை மற்றும் விவசாயத்துறை அதிகாரிகளும் ஆணையத்தில் உறுப்பினர்களாக உள்ளார்கள்.