ஆந்திர அரசியலில் மீண்டும் 'டோலிவுட் புயல்'? - புதுவரவை நோக்கும் தெலுங்கு தேசம் தொண்டர்கள்!

ஆந்திர அரசியலில் மீண்டும் 'டோலிவுட் புயல்'? - புதுவரவை நோக்கும் தெலுங்கு தேசம் தொண்டர்கள்!
ஆந்திர அரசியலில் மீண்டும் 'டோலிவுட் புயல்'? - புதுவரவை நோக்கும் தெலுங்கு தேசம் தொண்டர்கள்!
Published on

தெலுங்கு தேசம் கட்சியில் நிலவி வரும் பிரச்னைகள் ஆந்திர அரசியலிலும், டோலிவுட் சினிமா வட்டாரத்திலும் ஹாட் டாப்பிக்காக மாறி இருக்கிறது. 'டோலிவுட் புயல்' ஜூனியர் என்.டி.ஆரை மையப்படுத்தும் இந்த விவகாரம் அங்கே அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆந்திராவில் 2019 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை இழந்தது என்டிஆர் ஆரம்பித்த தெலுங்கு தேசம் கட்சி. இதன்பின் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல்களிலும் இக்கட்சி ஜெகனிடம் வெற்றியை பறிகொடுத்தது. அடுத்தடுத்த தேர்தல் தோல்விகள், கட்சிக்குள் சந்திரபாபு நாயுடு தலைமையை கேள்வி எழுப்பி இருக்கிறது. கட்சித் தொண்டர்கள் பலர், தற்போது ஒருமித்த குரலாக 'கட்சியை பலப்படுத்த ஒருவரை அழைத்துவர வேண்டும்' என்று சந்திரபாபு நாயுடுவிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தொண்டர்கள் அழைத்து வர சொல்லும் அந்த நபர் பிரபல டோலிவுட் ஹீரோ ஜூனியர் என்.டி.ஆர்தான்.

கடந்த மாதத்துக்கு முன்பு, அதாவது கொரோனா வைரஸ் தொற்றுநோய் தீவிரப் பரவலுக்கு முன்பு தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் கட்சித் தொண்டர்களின் கூட்டத்தை சந்திரபாபு நாயுடு நடத்திய போதெல்லாம், கட்சியின் மகிமையை புதுப்பிக்க ஜூனியர் என்.டி.ஆரை மீண்டும் அழைத்து வருமாறு அவரின் முன்னிலையிலேயே வலியுறுத்தினர். இவ்வளவு ஏன், சந்திரபாபு நாயுடு சமீபத்தில் தனது குப்பம் தொகுதியில் பயணம் செய்தபோதும் சிலர் நேரடியாகவே ஜூனியர் என்.டி.ஆர்-க்கு கட்சியில் பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று கூறினர். இது அம்மாநில செய்திகளில் இடம்பிடித்தது.

ஜூனியர் என்.டி.ஆர் அரசியலுக்கு திரும்புவதன் மூலமே தெலுங்கு தேசம் கட்சியை மீண்டும் பலப்படுத்த முடியும் என்பது தொண்டர்களின் கோரிக்கையாக உள்ளது. அதற்கு காரணம், ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்தபோது அதாவது 2009 சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னர் தெலுங்கு தேசம் கட்சியின் ஒரு அங்கமாக இருந்து பணியாற்றினார் ஜூனியர் என்.டி.ஆர். தேர்தலின்போது ஜூனியர் என்.டி.ஆரை சந்திரபாபு நாயுடு பயன்படுத்தினார். அவரும் பல இடங்களில் பிரசாரங்களில், கட்சிப் பணிகளில் ஈடுபட்டார். அப்போது இருந்த சினிமா பிரபலம், என்.டி.ஆர் பேரன் என்ற அறிமுகம் மக்கள் மத்தியில் நல்ல ரீச் கொடுக்க, அவர் பிரசாரம் செய்த தொகுதிகளில் வெற்றியை அறுவடை செய்தது தெலுங்கு தேசம்.

ஆனால், நாட்கள் செல்ல செல்ல ஜூனியர் என்.டி.ஆர், கட்சியில் படிப்படியாக புறக்கணிக்கப்பட்டார். அவர் இடத்தில் தனது சொந்த மகன் நர லோகேஷை கொண்டுவந்தார் சந்திரபாபு. புறக்கணிப்பின் காரணமாக, சினிமா பக்கம் தீவிர கவனம் செலுத்த தொடங்கிய ஜூனியர் என்.டி.ஆர் தனது தொடர் வெற்றிகளால் இப்போது டோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இந்த நிலையில் தான் அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டிருந்த தெலுங்கு தேசம் தொண்டர்கள், தற்போது ஜூனியர் என்.டி.ஆரை தேடத் துவங்கியுள்ளனர். தற்போது அவருக்கு மக்கள் மத்தியில், ரசிகர்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு கட்சிக்கு பயன்படும் என அவர்கள் கணக்கு போடுகின்றனர்.

இதன் வெளிப்பாடாக ஞாயிற்றுக்கிழமை, ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்கள் குப்பத்தின் முலகலப்பள்ளி என்ற கிராமத்தில் பேனர் ஒன்றை வைத்து அவர் மீண்டும் தீவிர அரசியலுக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். அதேபோல், அவர் கட்சித் தலைமையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற புது குண்டையும் போட்டுள்ளனர். இது சந்திரபாபு நாயுடு தலைமையை அசைத்து பார்த்துள்ளது. தொண்டர்கள் கோரிக்கை ஒருபுறம் இருக்க, ஜூனியர் என்.டி.ஆர் இதுதொடர்பாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. மேலும் அவர் இப்போது தீவிர அரசியலுக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகளும் இல்லை. ஏனென்றால், இவருக்கென தனி ரசிகர் பட்டாளம், தொடர் வெற்றி என தெலுங்கு சினிமாவின் அசைக்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக சினிமா தொழிலின் உச்சத்தில் இருந்து வருகிறார்.

இந்த சமயத்தில் அவர் இத்தனை ஆண்டுகளாக கட்டமைத்த தனது சினிமா கோட்டையை விட்டு அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என்பதே நிதர்சனம். ஆனால் இதனை வைத்து மற்றொரு தெலுங்கு சூப்பர் ஸ்டாரும், ஜூனியர் என்.டி.ஆரின் சித்தப்பாவும், தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏவாகவும் இருக்கும் நந்தமுரி பாலகிருஷ்ணா என்னும் பாலையா ஒரு திட்டம் தீட்டி வருகிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

தெலுங்கு தேசம் கட்சியில் பொலிட் பீரோ உறுப்பினர்களில் ஒருவராக இருக்கும் பாலையாவும் தற்போது சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். என்றாலும் அவ்வப்போது அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார். தற்போது அரசியலில் மிகவும் தீவிரமாக ஈடுபட முடிவு செய்துள்ளார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். இது தொடர்பாக தெலுங்கு ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் வைசாக் நகர செயலாளர் பசர்லா பிரசாத் என்பவர், "பாலையா விரைவில் முழுநேர அரசியலில் குதிக்கப் போகிறார். சந்திரபாபு மற்றும் லோகேஷின் தலைமையை கொண்டு கட்சியை புதுப்பிக்க முடியாது என்பதை பாலையா புரிந்து கொண்டார். இந்த நேரத்தில் கட்சியின் மூத்த தலைவர்களான புட்சையா சவுத்ரி போன்ற தலைவர்களும் ஜூனியர் என்.டி.ஆர் கட்சியை வழிநடத்த முன்வர வேண்டும் என்பதை வெளிப்படையாக தெரிவித்துள்ளதை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆனால், ஜூனியர் என்.டி.ஆர் இப்போதைக்கு எந்த ஆர்வத்தையும் காட்டவில்லை. எனவே இதை தீவிரமாக எடுத்துக் கொண்ட பாலகிருஷ்ணா, என்.டி.ஆரின் வாரிசாக, தனது மைத்துனர் சந்திரபாபு நாயுடுவிடமிருந்து கட்சியின் தலைமை கவசத்தை எடுக்க முடிவு செய்துள்ளார். 2024 தேர்தல்களில் அவர் முதல்வர் வேட்பாளராக இருக்க அதிக வாய்ப்புகள் உண்டு. ஜூனியர் என்.டி.ஆர் இப்போது தீவிர அரசியலுக்கு வர முடியாது. அவரது சினிமா வாழ்க்கை உச்சத்தில் உள்ளது. அவரது அரசியல் ஆர்வமும் அவ்வளவு தெளிவாக இல்லை. எனவேதான் இந்த இடைவெளியை இப்போது பாலகிருஷ்ணா நிரப்ப முடிவு செய்துள்ளார். பாலையா முதல்வராக தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வர வேண்டும் என நாங்களும் விரும்புகிறோம்" என்று கூறியுள்ளார்.

இந்த கருத்துக்கள் உண்மையானதா என்பது தொடர்பாக பாலகிருஷ்ணா எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. மேலும் தனது மருமகனை, மைத்துனரை எதிர்த்து அவர் கட்சித் தலைமைக்கு போட்டியிடுவாரா என்பது மிகப்பெரிய சந்தேகம். அதேநேரம், கடந்த ஆண்டு ஒரு நேர்காணலில், "கட்சித் தலைமை, நாரா(சந்திரபாபு)- நந்தமூரியின்(என்.டி.ஆர்) குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் செல்லப்போவதில்லை" என்றார் பாலகிருஷ்ணா. இதுபோன்ற கருத்துக்கள் அவர் கட்சியை வழிநடத்த விரும்புகிறாரா என்பதை கேள்வி எழுப்பும் விதமாகவே இருந்தது. பாலகிருஷ்ணா ஒரு நடிகராக மட்டுமில்லாமல், ஒரு அரசியல்வாதியாகவும் வெற்றிபெற்றவர் தான்.

தெலுங்கு தேசம் சார்பாக இந்துபூர் தொகுதியிலிருந்து இரண்டு முறை வென்றுள்ளார். 2019 பொதுத் தேர்தலில் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்ட அலை இருந்தபோதிலும் இந்துபூரில் தனது இடத்தை தக்கவைத்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்தான் பாலகிருஷ்ணா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இரு டோலிவுட் சூப்பர் ஸ்டார்களின் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் ஆந்திர மாநிலத்திலும், தெலுங்கு தேசம் கட்சியிலும் ஒரு புயலை கிளப்ப வாய்ப்பிருக்கிறது என சொல்லப்படுக.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com