குருகிராம் பகுதியிலுள்ள கேர்கி டௌலா சுங்கச்சாவடியில் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் பெண் ஊழியரை இன்று காலை கார் டிரைவர் தாக்கிய சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
ஹரியானா மாவட்டம் குருகிராம் பகுதியிலுள்ளது கேர்கி டௌலா சுங்கச்சாவடி. அங்குசுங்கக்கட்டணம் வசூலிக்கும் பெண் ஊழியர் இன்று காலை வழக்கம் போல் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த கார் ஓட்டுநர் ஒருவர் சுங்கக்கட்டணம் செலுத்தாமல் செல்ல இருந்தவரை பெண் ஊழியர் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனிடையே பெண் ஊழியருக்கும் அந்த கார் டிரைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த ஊழியர்கள் தடுத்தும் கூட
வாக்குவாதத்தை நிறுத்தவில்லை.
வாக்குவாதம் முற்றிய நிலையில் கோபமடைந்த கார் டிரைவர் அந்த பெண் ஊழியரின் முகத்தில் வேகமாக குத்தினார். அதில் பணியிலிருந்த பெண் ஊழியருக்கு மூக்கில் ரத்தம் சலசலவென்று வந்தது. இருவருக்கும் இடையேயான இந்த சண்டை அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை வைத்து குற்றம்சாட்டப்பட்டவர் மீது காவல் துறையில் புகாரளித்துள்ளனர்.
குருகிராம் பகுதியில் பெண் ஊழியர்களுக்கு மட்டுமல்ல இது போன்ற நிலை. ஆண் ஊழியர்களுக்கும்இதே நிலை தொடர்ந்து வருவது வழக்கமாகி விட்டது. இதற்கு முன் கடந்த வருடம் டிசம்பர் மாதம் காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவரை அங்குள்ள கார் ஓட்டுநர் ஒருவர் காரோடு தரதரவென்று இழுத்து சென்ற சம்பவமும் இங்கேதான் நடந்தது.