சுங்கச்சாவடி பெண் ஊழியரும் பெண் பயணி ஒருவரும் நாசிக்கின் சுங்கச்சாவடியில் ஒருவரை ஒருவர் குடுமிப்பிடி சண்டையிட்டுக் கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவம் நாசிக்கின் பிம்பல்கானில் உள்ள டோல் பிளாசாவில் நடந்திருக்கிறது.
சுங்கக் கட்டணம் தொடர்பாக பெண் ஊழியருக்கும், பெண் பயணிக்கும் இடையே சண்டை மூண்டிருக்கிறது. அந்த இரண்டு பெண்களும் மாறி மாறி முடியை பிடித்து, அடித்து தள்ளி சண்டையிடுகிறார்கள். இந்த தகராறின் போது இருவரும் மராத்தியில் வசைபாடிக்கொள்கிறார்கள்.
சில நிமிடங்களுக்கு நீடித்த இந்த சண்டையை அங்கிருந்தவர்களில் ஒரு சிலரை தவிர மற்ற எவரும் தடுக்காமல் சுற்றி சுற்றி வீடியோ எடுப்பதையே முனைப்பாக இருந்திருக்கிறார்கள் என்பது வீடியோவை காணும் போது தெரிய வருகிறது.
இந்த சம்பவத்தை ட்விட்டர் பயனர் ஒருவர் தனது பக்கத்தில் பகிர்ந்து, “இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நாசிக்கின் பிம்பல்கான் சுங்கச்சாவடியில் நடந்திருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும், “எப்படி இந்த சண்டை தடுக்கப்படாமல் இருந்திருக்கிறது? வீடியோ எடுத்து பகிர்வதுதான் தற்போதைய காலகட்டத்தில் முக்கியமாக இருக்கிறதா?” என்று ட்வீட்டியிருக்கிறார்கள்.
இதேப்போன்ற சம்பவம் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதியன்று மத்திய பிரதேசத்தின் ராஜ்கர் - போபால் இடையிலான கச்னாரியா சுங்கச் சாவடியில் நடந்திருக்கிறது. அதில், சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த மறுத்த நபரின் வாகனத்தை செல்லவிடாமல் தடுத்த பெண் ஊழியரை ஆக்ரோஷமாக அடித்திருக்கிறார். அந்த பெண்ணும் பதிலுக்கும் அந்த நபரை செருப்பால் அடித்திருந்தார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.