இந்தியா
#TopNews புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை முதல் ரஜினிக்கு சம்மன் வரை
#TopNews புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை முதல் ரஜினிக்கு சம்மன் வரை
இன்றைய தினத்தின் சில முக்கியச் செய்திகள்..
- தமிழகத்தில் புரெவி புயல் பாதிப்புகளை மதிப்பிட மத்திய குழுவை மீண்டும் தமிழகத்திற்கு அனுப்ப உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த தகவலை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அண்மையில் தமிழகம் வந்திருந்த அந்தக் குழு இரண்டு நாட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, சேதங்கள் தொடர்பான ஆவணங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு டெல்லி சென்றடைந்தது.
- தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தின் உயர்நிலை குழுவிடம் அதிமுக கோரிக்கை வைத்துள்ளது. அதேநேரத்தில் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என திமுக உள்ளிட்ட கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் பின்னணியில் சமூக விரோதிகள் இருப்பதாக கருத்து தெரிவித்த விவகாரம். ஜனவரி 19இல் நேரில் ஆஜராகுமாறு நடிகர் ரஜினிக்கு விசாரணை ஆணையம் சம்மன்.
- பிரிட்டனில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து வேகமாக பரவி வருவதை அடுத்து, அந்நாட்டுக்கான விமான சேவையை இந்தியாவும் தற்காலிகமாக தடை செய்துள்ளது. ஏற்கெனவே கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை தடை செய்துள்ளன. பிரிட்டனிலிருந்து சென்னை வரும் விமானப் பயணிகளுக்கு தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அறிவிப்பு.
- டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு நடத்தப்படும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 2021 புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனைத்து கடற்கரைகளிலும், சாலைகளிலும் அனுமதி இல்லை என்பதால் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் பொதுமக்கள் கடற்கரைகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜ்பவனில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள இந்த சந்திப்பில், ஸ்டாலினுடன் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அரசு மீது சில ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஸ்டாலின் மனு அளிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.