தொடரும் சஸ்பெண்ட் நடவடிக்கை: இன்று 49 எம்.பிக்கள்.. இதுவரை 141 பேர்; விவாதத்தில் முக்கிய மசோதாக்கள்!

குளிர்கால கூட்டத்தொடரில் இதுவரை 141 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
mps
mpstwitter
Published on

செய்தியாளர்: கணபதி சுப்ரமணியம்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு வலுத்துவரும் நிலையில், மேலும் 49 மக்களவை உறுப்பினர்கள் இன்று (டிச.19) இடைநீக்கம் செய்யப்பட்டனர். பதாகைகளை ஏந்தி தொடர் முழக்கத்தில் ஈடுபட்டது மற்றும் தங்கள் இருக்கைகளில் இருந்து வெளியேறி சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட முயன்றது போன்ற நடவடிக்கைகள் அவையின் அலுவலர்களுக்கு குந்தகம் விளைவிப்பதாக இவர்கள்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

எப்போதும் கண்டிராத அதிரடியாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இதுவரை 141 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மக்களவையைச் சேர்ந்த 95 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த 46 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதுவரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இரண்டு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்பட்டு ஜனநாயக படுகொலை நாடாளுமன்றத்தில் அரங்கேற்றப்பட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

mps
ஒரே நாளில் 78: மக்களவையில் திமுக, காங். உள்ளிட்ட 33 பேர், மாநிலங்களவையில் 45 எம்பிக்கள் சஸ்பெண்ட்!

காங்கிரஸ் கட்சியின் கார்த்தி சிதம்பரம், சசிதரூர், மற்றும் மனிஷ் திவாரி ஆகிய எம்பிக்கள், இன்று இடைநீக்கம் செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். தேசிய மகாநாடு கட்சியைச் சேர்ந்த பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த டிம்பிள் யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுப்ரியா சுலே, பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த தனுஷ் அலி உள்ளிட்டோரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திமுகவைச் சேர்ந்த ஜெகத்ரட்சகன், செந்தில்குமார், தனுஷ்குமார் ஆகியோரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

காங்கிரஸ், திமுக, மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட ஒருசிலர் மட்டுமே, மக்களவையில் இத்தகைய நடவடிக்கையிலிருந்து தப்பி உள்ளனர்.

மக்களவையில் எதிர்ப்பு தெரிவிக்க எதிர்க்கட்சி உறுப்பினர் பெரும்பாலோர் இல்லாத நிலையில், மூன்று முக்கிய மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாட்சியா மசோதா ஆகியவை மீதான விவாதம் நடைபெற்றபோது, அதில் பங்கேற்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லை. பாரதிய ஜனதா கட்சி மற்றும் அந்தக் கட்சியுடன் தோழமையாக உள்ள பிஜு ஜனதாதளம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் போன்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இந்த விவாதத்தில் பங்கேற்றனர். இந்திய குற்றவியல் சட்டம் உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் அளிக்கும் மூன்று சட்டங்களுக்கு பதிலாக புதிய சட்டங்களை உருவாக்க இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: மும்பை அணியில் இருந்து விலகினாரா சச்சின் டெண்டுல்கர்? உண்மையில் நடந்தது என்ன?

ஏற்கெனவே உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த மசோதாக்களை முந்தைய கூட்டத்தொடரில் தாக்கல் செய்த நிலையில், இந்த மசோதாக்கள் நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டிருந்தன. திருத்தங்களுடன் மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள், இன்று 49 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகு மக்களவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதைத் தவிர ஏற்கெனவே நிலுவையில் உள்ள மசோதாக்களும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

மாநிலங்களவை தலைவரான குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை திருணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் கல்யாண் பானர்ஜி கிண்டல் செய்தது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் புதிய நாடாளுமன்ற வழியாக படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட போது, கல்யாண் பானர்ஜி மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரைப்போல நடித்து, அவரை கிண்டல் செய்தார். அப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அதை தங்கள் கைப்பேசிகளில் பதிவுசெய்தனர். பின்னர் இந்த காணொளி வைரலாக பரவி, பல தொலைக்காட்சி செய்திகளிலும் இடம்பெற்றது.

இதையும் படிக்க: Rewind 2023: எர்டோகன் to ஜேவியர் மிலே.. உலக அரங்கில் அரசியல் மாற்றம் ஏற்பட்ட 6 நாடுகள்!

இந்த இழிவான செயலை, தான் தொலைக்காட்சியில் கண்டதாக ஜெகதீப் தங்கர் கடும் கண்டனம் தெரிவித்தார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர், ’இந்த நடவடிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாண்பை குறைக்கும் விதமாக உள்ளது’ என விமர்சனம் செய்தனர். ’இப்படிச் செயல்படுவதால்தான் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இடைநீக்க நடவடிக்கையை சந்திக்க நேரிடுகிறது’ என பாரதிய ஜனதா கட்சி தனது கண்டனத்தைத் தெரிவித்தது.

மக்களவையில் பார்வையாளர்கள் இருவர் அத்துமீறி நுழைந்தது மற்றும் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு குறைபாடு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விவாதம் நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலைப்பாட்டை மத்திய அரசு ஏற்காத நிலையில், தொடரும் மோதல் போக்கு 141 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் காரணமாக மேலும் தீவிரமடைந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com