மக்களவைத் தேர்தலில் 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது பாரதிய ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணி. இந்நிலையில் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க தயாராகி வருகிறது.
மக்களவைத் தேர்தலில் 99 தொகுதிகளில் வெற்றி பெற்று இரண்டாவது தனிப்பெரும் கட்சியானது காங்கிரஸ் கட்சி. மேலும், I.N.D.I.A. கூட்டணி 234 இடங்களில் வெற்றி.
I.N.D.I.A. கூட்டணி கட்சிகள் வென்ற தொகுதிகளை விட அதிக தொகுதிகளில் பாஜக மட்டும் வென்றுள்ளது. இது அரசியல் அமைப்பு மீது மக்கள் கொண்ட நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி எனவும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்.
I.N.D.I.A. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் இன்று டெல்லியில் ஆலோசனை மேற்கொள்கின்றனர். ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் கட்சிகளை அணுகுவது பற்றி ஆலோசிக்கப்படும் என ராகுல் காந்தி பேட்டி.
தமிழகம் - புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி. 29 தொகுதிகளில் இரண்டாமிடம் பிடித்தது அதிமுக கூட்டணி.
கோவை தொகுதியில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தோல்வி. மேலும், கடும் போட்டி நிலவிய தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியை தோற்கடித்து, திமுக வேட்பாளர் மணி வெற்றி.
மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவின் பகல் கனவு பலிக்கவில்லை எனவும், ஜனநாயகத்தையும் அரசியல்சாசனத்தையும் காக்க திமுக தொடர்ந்து பணியாற்றும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி.
“கூட்டணிக்காக அல்லும் பகலும் உழைத்த தொண்டர்களின் திருப்பாதம் பணிகிறேன். மேலும், தொண்டர்களின் உழைப்புக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன்?” என கண் கலங்குவதாக ஈபிஎஸ் உருக்கம்.
ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சியமைக்கிறது சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி. இந்நிலையில், பிரதமர் மோடி, தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் சரத்பவார் உள்ளிட்ட தலைவர்கள் தொலைபேசியில் அவருக்கு வாழ்த்து.
ஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வரும்நிலையில், அங்கு முதன்முறையாக ஆட்சியை கைப்பற்றுகிறது பாரதிய ஜனதா கட்சி.
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த 4 மாணவ, மாணவியர் 720-க்கு, 720-க்கு மதிப்பெண் பெற்று முதலிடம்.
உலகக்கோப்பை டி20 தொடரில் இங்கிலாந்து- ஸ்காட்லாந்து இடையேயான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இன்றிரவு இந்தியா- ஐயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை.