மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா போர்க்கொடி தூக்கினார். மேலும், அக்கட்சியில் இருந்து திடீரென ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தார். அங்கு அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்பட்டது.
இதனிடையே ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அதில், ம.பி அமைச்சர்களாக இருந்த 6 பேரின் ராஜினாமாவை மட்டும் சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். மீதமுள்ளவர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளாமல் இருந்த நிலையில், இன்று ஏற்றுக்கொண்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், மத்திய பிரதேச ஆளுநர் உத்தரவிட்டதின்பேரில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதனால் மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் 22 காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதால், சட்டப்பேரவையில் காங்கிரஸின் கூட்டணியின் பலம் 121-லிருந்து 99 ஆக குறைந்துள்ளது. ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க 104 எம்எல்ஏக்களின் பலம் தேவை.
மத்திய பிரதேச சட்டப்பேரவை மொத்த பலம்: 230 உறுப்பினர்கள் (இரு எம்.எல்.ஏ.க்கள் உயிரிழப்பு). மொத்த பலம் 228.
22 எம்.எல்.ஏக்களின் ராஜினாமா ஏற்புக்கு பின் மொத்த பலம் : 206
பெரும்பான்மையை நிரூபிக்க தேவைப்படும் எம்.எல்.ஏக்கள் : 104
காங்கிரஸ் கூட்டணி 99 (காங்.: 92+ பிஎஸ்பி: 2+ சமாஜ்வாதி: 1+ சுயேச்சை: 4)
பாஜக 107
பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் உள்ளதால், மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.