மத்தியப் பிரதேசத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு ஆளுநர் லால்ஜி டன்டன் உத்தரவிட்டுள்ள நிலையில், நள்ளிரவில் முதலமைச்சர் கமல்நாத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியிலிருந்து இளம் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா விலகி, பாஜகவில் இணைந்த நிலையில், அவரது ஆதரவாளர்களான 22 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்தனர். இவர்களில் ஆறு பேரின் ராஜினாமாக்களை சபாநாயகர் ஏற்று கொண்டுள்ளார்.
இந்த நிலையில், இன்று நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆளுநர் லால்ஜி டன்டன் உரையாற்றுகிறார். அதைத்தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளார். எனினும், நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த அறிவிப்பு பேரவையின் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறவில்லை. இதனிடையே திடீரென்று நள்ளிரவில் முதலமைச்சர் கமல்நாத்தை அழைத்து ஆளுநர் லால்ஜி டன்டன் ஆலோசனை நடத்தினார்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த கமல்நாத், அவை நடவடிக்கைகளை சுமூகமாக நடத்துமாறு ஆளுநர் அறிவுறுத்தியாக தெரிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து, சபாநாயகர் முடிவு செய்வார் என்றார். மேலும், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தான் தயார் என்றும் அதற்கு முன்னதாக அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களை விடுவிக்க வேண்டும் என ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறினார்.
அதேநேரத்தில் பெரும்பான்மை இல்லாததால் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த காங்கிரஸ் அரசு அஞ்சுவதாக, முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் குற்றம்சாட்டியுள்ளார். முன்னதாக ஜெய்ப்பூரில் தங்கியிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், குருகிராமில் தங்கியிருந்த பாஜக எம்.எல்.ஏ.க்களும் போபால் திரும்பினர்.