திருமணமான பெண் ஐஏஎஸ் மீது ஒருதலைக் காதல் - சிஐஎஸ்.எஃப் அதிகாரி கைது
ஐஏஎஸ் அதிகாரி மீது கொண்டிருந்த ஒருதலை காதலால் அவரது கணவரை பழிவாங்க நினைத்த சிஐஎஸ்.எஃப் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு படையில் சீனியர் கமாண்டென்ட் ஆக இருப்பவர் ரஞ்சன் பிரதாப் சிங்(45). இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு பெண் ஒருவரை சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராகும் போது சந்தித்துள்ளார். அந்தப் பெண்ணுடன் உத்தரகாண்ட்டிலுள்ள ஐஏஸ் பயிற்சி அகடாமியில் நான்கு மாத பயிற்சி வகுப்பில் ரஞ்சன் பிரதாப் சிங் கலந்து கொண்டுள்ளார். அப்போது முதல் இந்தப் பெண்ணுடன் அவருக்கு ஒருதலைக் காதல் ஏற்பட்டுள்ளது.
எனினும் அந்தப் பெண் ஐஏஎஸ் அதிகாரியாக பணியேற்ற பிறகு அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. இது ரஞ்சன் பிரதாப் சிங்கிற்கு மன வருத்ததை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அந்தப் பெண்ணிடம் நட்பாக பேசி வந்துள்ளார். அப் பெண் சமீபத்தில் இவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதில் மிகவும் கோபமடைந்த ரஞ்சன் பிரதாப் சிங், அப்பெண்ணை பழிவாங்க திட்டமிட்டுள்ளார்.
அதன்படி அப்பெண்ணின் கணவரது காரில் போதைப் பொருள் ஒன்றை ஒளித்து வைத்து விட்டு சிஐஎஸ்எஃப் அதிகாரிகளிடம் தகவல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் காரில் சோதனையிட்டு பார்த்தப் போது போதைப் பொருள் இருந்தது. எனினும் சிஐஎஸ்எஃப் பிரிவு காவலர்களுக்கு சந்தேகம் எழுந்தது. ஏனென்றால் போதைப் பொருளை பதுக்கி வைப்பவர் காரிலேயே எப்படி மூன்று இடத்தில் பதிக்கி வைப்பார். அத்துடன் போதைப் பொருள் இருக்கும் தகவல் முதலில் டெல்லி காவல்துறைக்கு செல்லாமல் எப்படி சிஐஎஸ்எஃப் அதிகாரிகளுக்கு வந்தது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகள் தகவல் வந்த கைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டனர். அந்தக் கைப்பேசியை வைத்திருந்த நபர், “இருவர் என்னிடம் வந்து அவசரமாக கைப்பேசியை வாங்கி ஒரு அழைப்பு செய்தனர். நான் ஒரு பெட்ரோல் நிலையத்தில் பணிப்புரிகிறேன்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இந்தப் பெட்ரோல் நிலையத்தின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பிறகு சிஐஎஸ்.எஃப் சீனியர் கமாண்டென்ட் ரஞ்சன் பிரதாபிற்கு இச்சம்பவத்தில் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது.
இதன்பின்னர் ரஞ்சன் பிரதாப் சிங்கிடம் நடத்திய விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். எனவே காவல்துறையினர் அவரையும் அவருக்கு போதைப் பொருள் வாங்க உதவியாக இருந்த அவரது நண்பரையும் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் கைதான சிஐஎஸ் எஃப் அதிகாரி ரஞ்சன் பிரதாப் சிங் தற்போது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக்கத்தில் பாதுகாப்பிற்கான இயக்குநராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.