தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராவதில் இருந்து சமீபத்தில் விலக்கு கோரியிருந்தது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம். அந்நிர்வாகத்தின் அந்த விளக்குத்துக்கு தமிழக அரசு இன்று எதிர்வாதம் வைத்துள்ளது.
அந்தவாதத்தில் “ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுக சாமி விசாரணை ஆணையத்தை விரிவாக்க வேண்டும் என நீதிமன்றம் சொன்னால், அதனை செய்வதற்கும் தயாராக உள்ளோம்” என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.
இன்றைய வழக்கு விசாரணையில், நீதிபதிகள் தரப்பிலிருந்து “ஒரு வருடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது. அப்பல்லோவின் 50 மருத்துவர்கள் விசாரிக்கப்பட்டார்கள். அதன்பிறகு தற்போது வந்து அப்பல்லோ தரப்பு ‘ஆணையம் செயல்பட கூடாது’ என்கிறது. ஒரு வருடமாக அப்பல்லோ என்ன செய்து கொண்டிருந்தது? ஆணையம் ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டது என்பதை ஏற்க முடியாது. ஆகவே ஆணையம் எங்கே தன் பணிகளை நிறுத்தியுள்ளதோ அந்த இடத்தில் இருந்து தொடரவேண்டும்” என கூறினர்.
தொடர்ந்து தமிழக அரசு கூறுகையில், “இந்த ஆணையம் உண்மை கண்டறியும் குழு தானே தவிர அது நிபுணர் குழு அல்ல. அதில் மருத்துவர்கள், நிபுணர்கள் இருக்க வேண்டியது அல்ல. மருத்துவர்கள் சொல்வதை பதிவு செய்து அதை அரசிடம் கொடுப்பது மட்டும் தான் ஆணையத்தின் வேலை. அப்பல்லோ ஒரு நல்ல மருத்துவமனை என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதற்கான ஆணையம் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்கிறது என்பதை ஏற்க முடியாது. மனு மீது மனுவை தாக்கல் செய்து ஆணையத்தின் செயல்பாட்டை தடுக்கவே அப்பல்லோ முயற்சிக்கிறது.
ஆணையத்தில் ஏதேனும் தவறுகள் இருப்பதை சுட்டிக்காட்டினால் அதனை சரி செய்ய தயாராக இருக்கிறோம். ஆணையத்தை விரிவாக்க வேண்டும் என நீதிமன்றம் சொன்னால் அதனை செய்வதற்கும் தயாராக உள்ளோம். ஆனால் ஆணையம் செயல்படவே கூடாது என சொல்வதை ஏற்க முடியாது. ஆணையத்தில் மருத்துவ நிபுணர்கள் சேர்ப்பதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம்.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான உண்மைகளை மக்களுக்கு சொல்வது மிக மிக முக்கியம் ஆணையத்தில் வேறு நீதிபதிகளை சேர்ப்பது பற்றி எல்லாம் கருத்துகளும் யோசனைகளும் முன்வைக்கப்படுகிறது. ஆனால் அது எல்லாம் கடைசி வாய்ப்பு தான். அதற்கு முன்பாக தற்போதைய ஆணையம் ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டதா என்பதை கூற வேண்டும். அப்பல்லோ மருத்துவமனையில், என்னென்ன மருந்துகளெல்லாம் ஜெயலலிதாவிற்கு கொடுத்தது மற்றும் என்ன சிகிச்சையை வழங்கியது போன்ற விவரங்களெல்லாம் வெளிப்படையாக தெரியவேண்டும். அதை தான் ஆணையம் செய்து வருகிறது.
இவற்றின் முடிவில் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்பதும் நிராகரிப்பதும் அரசின் முடிவு. அதில் கூட ஆணையம் தலையிட முடியாது. அப்பல்லோ மனுவில் வைத்திருக்ககூடிய கோரிக்கைகளே பரிசீலனைக்கு உட்பட்டது கூட கிடையாது. ஆணையத்திற்கு இல்லாத அதிகாரத்தை எல்லாம் செய்ய சொல்லி அப்பல்லோ கேட்கிறது. எனவே அப்பல்லோவின் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிடப்பட்டது.
அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், “ஆணையத்தின் அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டவுடன் அங்கு இதன் மீது விவாதம் நடக்குமா?” என கேட்டனர்.
“நிச்சயம் நடக்கும்” என அரசு சொன்னது.
“அப்போது ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்தும் எதிர்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவார்கள் அல்லவா?” என நீதிபதிகள் கேட்டனர்.
”எதிர்கட்சி மட்டும் அல்ல,அரசும் கூட கேட்கும், விவாதத்தில் கலந்து கொள்ளும். விவாதித்து தான் அரசு கிரிமினல் நடவடிக்கையா, சிவில் நடவடிக்கையா அல்லது ஆணையத்தின் முடிவுகளை நிராகரிப்பதா என்பதை முடிவு செய்யும். ஆணையத்தின் அறிக்கை மீது நடவடிக்கை எடுத்து அரசு வழக்கு பதிவு செய்தால் அதன்பிற்கு மட்டும் தான் அதனை எதிர்த்து நீதிமன்றத்தை நாடலாம். இப்போதைக்கு ஆணையத்தை எதிர்த்து மனுதாக்கல் செய்ய எந்த வழிவகையும் இல்லை” என தமிழக அரசு கூறியது.
இத்துடன் தமிழக அரசின் வாதங்கள் நிறைவடைந்தது.
- நிரஞ்சன் குமார்