ஜி-20 மாநாடு தொடர்பான கருத்தரங்கங்களுக்கு தமிழ்நாடு அரசு முழு ஆதரவையும், ஒத்துழைப்பை வழங்கும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜி-20 குழுவின் 18வது மாநாடு 2023 செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு முழு வீச்சில் தயார் செய்ய தொடங்கியுள்ள நிலையில், ஜி-20 மாநாடு நடைபெறுவதற்கு முன்னதாக, அதன் துணை மாநாடு நாடு முழுவதும் 200 நகரங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் சென்னை, திருச்சி, தஞ்சை, கோவை உள்ளிட்ட நான்கு இடங்களில் நடத்துவதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த துணை மாநாடுகளையும் செப்டம்பர் மாதம் நடைபெறும் உச்சி மாநாட்டையும் நடத்துவது தொடர்பான முக்கிய ஆலோசனையும், மாநில அரசின் ஒத்துழைப்பை கோரும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.
இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து முதல்வர்களும் முக்கியக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் டெல்லி வந்தனர். அதன்படி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், தமிழகத்தில் இருந்து திமுக சார்பில் அக்கட்சித் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் டி.ஆர்.பாலு, அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தம்பிதுரை, விடுதலை சிறுத்தைகள் சார்பில் தொல்.திருமாவளவன், தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கே.வாசன், காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன் கார்கே, திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கு தேசம் சந்திரபாபு நாயுடு, பிஜு ஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக், அப்னா தளம் கட்சியின் அனுப்பிரியா படேல், சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜா, சிவசேனா தரப்பில் மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ஐக்கிய ஜனதா தளம் சார்பில் பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், தீவிரவாத தடுப்பு நடவடிக்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொருளாதாரம், கலாச்சாரம், வர்த்தகம் உள்ளிட்டப் பிரிவுகளில் இந்தியாவின் தலைமையில் ஜி20 கூட்டமைப்பை எவ்வாறு மேலும் வலுப்படுத்துவது என்பது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியா தலைமையேற்று நடத்தவுள்ள ஜி-20 மாநாடு மற்றும் அது தொடர்பான கருத்தரங்கங்களுக்கு தமிழ்நாடு அரசு முழு ஆதரவையும், ஒத்துழைப்பை வழங்கும் என உறுதியளித்துள்ளார்.
மேலும், அமைதி, அகிம்சை, நல்லிணக்கம், சமத்துவம், சமநீதி ஆகிய உயர் விழுமியங்களை உலக அளவில் கொண்டு செல்ல பிரதமர் மோடி இந்த வாய்ப்பை பயன்படுத்துவார் என உறுதியாக நம்புவதாக தெரிவித்தார். அதேவேளையில் காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கு இந்தியா நிர்ணயித்துள்ள இலக்குகளையும், உலக அளவில் இந்தியா அளித்துள்ள உத்தரவாதங்களையும் காப்பாற்ற அனைத்து வகையிலும் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.