டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் - பாஜக எம்.பி.யும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் சிங் மீது பாலியல் புகாரை முன்வைத்து மல்யுத்த வீராங்கனைகள் போராடி வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறு விளையாட்டு வீரர்களும் அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில், நேற்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு படுக்கைகளை வழங்க ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்கள் நேரில் சென்றனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த டெல்லி காவல்துறையினர் அவர்ளை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சற்று பதற்றமான சூழல் நிலவியது. இதில் ஒருகட்டத்தில் மல்யுத்த வீரர்கள் உடன் டெல்லி காவல்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்பு வாக்குவாதம் தள்ளுமுள்ளாக மாறியது.
இந்த தள்ளுமுள்ளின் இறுதியில் போராடிய வீராங்கனைகள் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து அவர்களேவும் “நள்ளிரவு நடந்த அந்நிகழ்வில் காவலர்கள் எங்கள் மேலே கை வைத்து கீழே தள்ளினர்” என கண்ணீருடன் செய்தியாளர்களிடம் பேசினர்.
இந்த வீடியோவை மேற்கோள் காட்டி தமிழ்நாடு முதல்வரும், டெல்லி முதல்வரும் இன்று வேதனையும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்திய மல்யுத்த வீரர்களுடனான டெல்லி காவல்துறையின் மோதல், வேதனை அளிக்கக்கூடியது மற்றும் அவமானகரமானதும்கூட” என்று தெரிவித்துள்ளார்
இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தன் ட்விட்டர் பக்கத்தில், "நாட்டின் சாம்பியன் வீரர்களிடம் இப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது மிகவும் வேதனையானது மற்றும் அவமானகரமானது. பாஜக, ஆணவத்தால் மோசம் போய்விட்டது. ஒட்டுமொத்த அமைப்பையே கேலிக்கூத்தாக்கியுள்ளனர். நாட்டு மக்களுக்கு எனது வேண்டுகோள், பாஜகவின் இந்த போக்கை பொறுத்துக் கொள்ளாதீர்கள். பாஜகவை வேரோடு பிடுங்கி விரட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது" என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், ''தங்கள் சாதனைகளால் நாட்டிற்கே பெருமை தேடித் தந்த நமது மற்போர் வீரர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் பெரும் அநீதியைக் கண்டு அதிர்ச்சி அடைகிறோம். இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. பெண்களுக்கு அதிகாரமளிப்பதைப் பற்றி நமது மாண்புமிகு பிரதமர் அவர்கள் தொடர்ந்து பிரசங்கம் செய்கிறார்.
ஆனால் அவரது பொய் வாக்குறுதிகளுக்கு முரணாக, கத்துவா, உன்னாவ், ஹாத்ரஸ், பில்கிஸ் பானு எனப் பல வழக்குகளிலும் பாதிக்கப்பட்டோருக்குத் தொல்லையளிப்பதும், குற்றம்சாட்டப்பட்டோரைப் பாதுகாப்பதுமே பா.ஜ.க.வின் அடையாளமாக இருக்கிறது. நமது மற்போர் வீரர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்'' என்று பதிவிட்டுள்ளார்.