திரிபுரா வன்முறை சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கச்சென்ற திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். உடனடியாக அவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலமான திரிபுரா மாநிலத்தில், கட்சிகளுக்கிடையே கடந்த சில நாட்களாக வன்முறை அரங்கேறி வருகிறது. அந்தவகையில் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களுக்கும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கும் மோதல் என்பது வலுத்து வருகிறது.
இந்நிலையில் அம்மாநில திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவி சாயோனி கோஷை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்திருக்கிறது. மேலும் இன்று காலை டெல்லியில் நாடாளுமன்றம் அருகே நார்த் பிளாக்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கவும் முயன்றனர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை மற்றும் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
ஆனால் அவர்கள் முறையாக அனுமதி பெறாத நிலையில் அனுமதிக்க முடியாது என பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் அமித்ஷாவின் அலுவலகத்திற்கு வெளியே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
இதுகுறித்து புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டோலா சென், “திரிபுரா வன்முறைச் சம்பவம் குறித்து இன்று மத்திய உள்துறை அமைச்சரை சந்திக்க நாங்கள் வந்தோம். ஆனால் எங்களை அதிகாரிகள் உள்ளே அனுமதிக்க மறுப்பு தெரிவித்தனர். ஆகவே அமித்ஷா அலுவலகத்திற்கு வெளியே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதுவரை எங்களை உள்துறை அமைச்சரோ, இணை அமைச்சரோ, அதிகாரிகளோ அழைத்து பேசவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எங்களுக்கே இந்த நிலைமை என்பதை பாருங்கள். தொடர்ந்து அறவழியில் எங்களுடைய போராட்டம் தொடரும்” என தெரிவித்தார்.
கிட்டத்தட்ட 5 மணி நேர தர்ணாவுக்குப் பின், அமித்ஷாவின் இல்லத்துக்கு செல்ல அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்கள் நேரடியாக அமித்ஷாவின் இல்லத்துக்கே சென்று அவரை சந்தித்து தங்கள் மனுவை அளித்தனர்.
- விக்னேஷ் முத்து