திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி சாந்தனு சென், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவடிக்கையில் சாந்தனு சென் பங்கேற்க தடை விதித்தார் வெங்கையாநாயுடு.
நேற்று எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் அவையில் முழக்கம் எழுப்பிக்கொண்டிருந்தனர். அப்போது தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து கொண்டிருந்தார். அந்த அறிக்கையின் நகலை அவரின் கையில் இருந்து பறித்து கிழித்து, அவையின் துணைத் தலைவர் முன்பு சாந்தனு சென் எறிந்தார். “இது அவையை அவமதிக்கும் செயலாகும். துணைத்தலைவருக்கு அவமரியாதை. அமைச்சரிடம் இருந்து அறிக்கையை பறித்து கிழித்தெறிந்திருப்பது அத்துமீறிய செயல்” என பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இதற்கு பதிலாக மத்திய அமைச்சரான ஹர்தீப் சிங் பூரி தங்களை மிரட்டும் விதமாக நடந்துகொண்டதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் பதில் புகார் அளித்திருந்தனர்.
இதையெல்லாம் பரிசீலித்த அவைத்தலைவர் வெங்கையாநாயுடு, சாந்தனு சென் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்கக் கூடாது என சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். இதற்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது.