வறட்சி நிவாரணத்திற்கு பிற மாநிலங்களுக்கு அதிகம் நிதி ஒதுக்கும் மத்திய அரசு தமிழகத்திற்கு குறைவாக நிதி ஒதுக்குவதாக திமுக-வின் செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் குற்றம் சாட்டினார்.
வறட்சி நிவாரணத் தொகையை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் இன்று 15-ஆவது நாளாக விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை டிகேஎஸ் இளங்கோவன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளுக்கு உதவ வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. ஆனால் விவசாயிகளின் பிரச்னையை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. மாறாக கஜானாவை நிரப்புவதில் குறியாக உள்ளது என்றார்.
மற்ற மாநிலங்களுக்கு அதிகப்படியான வறட்சி நிவாரணத் தொகை ஒதுக்கப்படுவதாகவும், ஆனால் தமிழக அரசுக்கு மட்டும் குறைவாக நிதி ஒதுக்கியதாகவும் அவர் குற்றம் சாட்டினார். விவசாயிகளின் போராட்டத்தை திமுக தொடர்ந்து ஆதரிக்கும் எனக் கூறிய அவர்,திமுக ஆட்சிக்காலத்தில் இரண்டு போக சாகுபடி நடைபெற்றது. ஆனால் அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒரு போக சாகுபடி கூட ஒழுங்காக நடைபெறவில்லை என்றார்.