ஆந்திர மாநிலம் நெல்லூரில் நாட்டு வைத்தியர் ஆனந்தையா உருவாக்கிய கொரோனா மருந்தை தயாரிக்க திருமலை திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத அமைப்பு திட்டமிட்டுள்ளது.
கிருஷ்ணபட்டினத்தை சேர்ந்த நாட்டு வைத்தியர் ஆனந்தையா 18 வகையான மூலிகைகளைக் கொண்டு தயார் செய்த மூலிகை மருந்து அவர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த கொரோனா நோயாளிகளுக்கு நல்ல பலனை தந்ததாக கூறப்படுகிறது.
இந்த செய்தி ஊடகங்களில் வேகமாக பரவ, மற்ற மாநிலங்களிலிருந்தும் மக்கள் கிருஷ்ணபட்டினம் நோக்கி செல்லத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் மூலம் ஆனந்தையாவின் நாட்டு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்படி ஆந்திர மாநில சுகாதாரத் துறையினருக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில், ஆயுர்வேத மருந்துகளை தயாரிக்க தேவையான முழு கட்டமைப்பு உள்ளதாலும், மருந்துக்கு தேவையான மூலிகைகள் திருமலையில் தாராளமாக கிடைப்பதாலும் இந்திய மருத்துவ ஆய்வு கழகத்தின் ஆயுஷ் குழு முடிவுகளை வெளியிட்டவுடன் அந்த மருந்துகளை தயார் செய்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.