திருப்பதி நாடாளுமன்ற இடைத்தேர்தலையொட்டி சந்திரபாபு நாயுடு மேற்கொண்ட பரப்புரை கூட்டத்தில் மர்ம நபர் கல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பதி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைதேர்தல் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தெலுங்கு தேச கட்சியின் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பனபாக லட்சுமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, திருப்பதியில் கிருஷ்ணாபுரம் என்ற பகுதியில் பரப்புரையில் ஈடுப்பட்டார்.
அப்போது மர்ம நபர் ஒருவர் கூட்டத்தில் கல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. கல் வீசியவர்கள் ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் ரவுடிசம் அதிகரித்து இருப்பதற்கு இதுவே நேரடியான சாட்சி என்று கூறியவர், தைரியமிருந்தால் நேருக்கு நேர் வந்து மோதுங்கள் பார்ப்போம். மக்கள் மீது ஏன் கற்களை வீசுகிறீர்கள் என்று பேசினார்.
அதனைத் தொடர்ந்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை எதிர்த்தும் கற்களை வீசியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் அங்கேயே சாலை மறியலில் ஈடுபட்டார். நான் ஜெட் பிளஸ் பாதுகாப்பில் இருந்தும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது மாநிலத்தில் பாதுகாப்பு எவ்வாறு இருக்கிறது என மக்களே முடிவெடுக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கூறினார்.