ஆந்திரம் மாநிலம் திருப்பதியில் உள்ள பிரசித்தி பெற்ற திருமலைக் கோயிலில் பக்தர்கள் ஆன்லைன் மூலமாக கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் ரூ1.79 கோடி காணிக்கையாகச் செலுத்தி இருக்கின்றனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகக் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமலில் இருக்கிறது. இந்த பொது முடக்கம் இம்மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. நாட்டில் ஒட்டுமொத்தமாக பொது முடக்கம் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக திருப்பதி திருமலை வெங்கடாசலபதி கோயிலுக்குப் பக்தர்கள் வரத் தடை விதிக்கப்பட்டது. கோயிலுக்குப் பக்தர்கள் வருவதற்குத் தடை என்றாலும் தினசரி பூஜைகள் நடந்து வருகிறது.
பொதுவாகத் திருமலைக் கோயிலில் கோடை விடுமுறைக் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்காக வருவார்கள். இப்போது பொது முடக்கம் என்பதால் திருப்பதியும் திருமலையும் வெறிச்சோடி காணப்படுகிறது. ஆனாலும் பக்தர்கள் கோயிலுக்கு நேரில் வந்த உண்டியலில் காணிக்கை செலுத்த முடியவில்லை என்பதால் ஆன்லைன் மூலம் இ-காணிக்கை செலுத்தியுள்ளனர். அதன் மூலம் கடந்த மாதம் ரூ.1.69 கோடி பெறப்பட்டதாகத் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி " கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மார்ச் 20 முதல் பக்தர்களால் பெருமாளைத் தரிசனம் செய்ய முடியவில்லை. ஆனால் பக்தர்கள் ஆன்லைன் மூலம் பிரசாதமான லட்டை விற்பனை செய்யக் கோரிக்கை விடுத்து வந்தனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, திருப்பதி லட்டு பிரசாதத்தை" பாதி விலையில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதாவது ஊரடங்கு காலத்தில் ரூ.50 லட்டு 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவிருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.