திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலின் உண்டியல் வருமானம் திடீரென கணிசமாக குறைந்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 16-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம விதிகளின்படி நடத்தப்படும் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலின் உண்டியல் வருமானம் திடீரென கணிசமாக குறைந்துள்ளது.
வழக்கமாக தினசரி 3 கோடி ரூபாய் உண்டியல் வருமானம் கிடைக்கும் நிலையில் நேற்று 73 லட்சம் ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோயில் குடமுழுக்கு நிகழ்வுகள் காரணமாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை 30 ஆயிரமாக குறைக்கப்பட்டதே காணிக்கை குறைந்ததற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர். பக்தர்கள் தரிசனத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் வரும் 16ம் தேதி வரை நீடிக்கும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.