குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகளை குறிப்பிட்டு இருப்பதே இந்திய அரசியலமைப்பின் சிறப்பு என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், அதுவே அரசியலமைப்பின் சிறப்பு எனவும் பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகளை குடிமக்களாகிய நாம் நிறைவேற்றுகிறோமா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆற்றிய உரையில், 70ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு தின நாளில் அனைத்து குடிமக்களுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். மேலும் அரசியலமைப்பின் வெற்றி மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் நடந்துகொள்வதை பொறுத்தது என்று அம்பேத்கர் பேசியதை குடியரசுத் தலைவர் தன் உரையின் போது மேற்கொள் காட்டினார்.
இந்தக் கூட்டத்தை காங்கிரஸ் புறக்கணித்ததோடு, மகாராஷ்டிரா விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.