பல சமூக ஆர்வலர்கள் நம்மிடையே இயற்கை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும், பெரும்பாலும் நாம் அதை காற்றில் பறக்கவிட்டுவிடுகிறோம் அல்லது மறந்துவிடுகிறோம். இப்படியான நம் அலட்சியப்போக்கை கண்டு, சில விலங்குகளும் பறவைகளும் தங்களின் செய்கைகளால் நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவிடுகின்றன. அவை நமக்கு பொட்டிலடித்த உணர்வை ஏற்படுத்திவிடுகிறது.
அப்படி ஒரு நிகழ்வு மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகில் உள்ள Ramdegi என்ற கிராமத்தில் இருக்கும் புலிகள் காப்பகம் ஒன்றில் (Tadoba Andhari Tiger Reserve) நடைபெற்றுள்ளது. அந்தக் காட்சியை புகைப்படக் கலைஞரொருவர் வீடியோவாக பதிவுசெய்த நிலையில், அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவின்படி, மும்பை Ramdegi என்ற மலை கிராமத்திற்கு அருகில் இருக்கும் பூங்காவில் புலி ஒன்று தண்ணீர் அருந்த வருகிறது. அந்த குளத்தில் பார்வையாளர்கள் வீசி சென்ற ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ஒன்று மிதந்துக்கொண்டிருந்தது. அதைக்கண்ட புலி தண்ணீர் அருந்துவதை விடுத்து குளத்திலிருந்து தண்ணீர் பாட்டிலை அப்புறப்படுத்துகிறது. இதை தீப்கதிகர் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் வளைதளத்தில் பதிவிட்டுள்ளார். இவர் விலங்குகளை புகைப்படமெடுக்கும் கலைஞர். கடந்த டிசம்பர் மாதம் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக அவர் பதிவிட்டுள்ளார். அது தற்பொழுது வைரலாகி வருகிறது.
சமீபத்தில் கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வு, ஒரு லிட்டர் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலில் சுமார் 2.4 லட்சம் பிளாஸ்டிக் துண்டுகள் இருப்பதாகவும் அவை தண்ணீரில் கலந்து நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது என்றும் கூறி, பிளாஸ்டிகில் உள்ள ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இருந்தது நினைவிருக்கலாம்.
அப்படியான பிளாஸ்டிக் பாட்டில்களை, மனிதர்கள் கொஞ்சமும் பொறுப்பின்றி இப்படி வீசுவது நமக்கு மட்டுமன்றி, பூமியிலுள்ள பிற உயிரினங்களுக்கும் சேர்த்து ஆபத்தையே கொடுக்கும். அதை நாம் உணர்கிறோமோ இல்லையோ, விலங்குகள் உணர்ந்துவிட்டன. இதையடுத்து ‘என்னை பார்த்தாச்சும் திருந்துங்களேன்’ என்பதுபோல இந்தப் புலியின் செய்கை இருப்பதாக பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்துவருகின்றனர்.!