செப்டம்பர் 9, 10 தேதிகளில் தலைநகர் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறும் நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டு தலைவர்கள் வருகையும் தொடங்கி விட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை பொருத்தவரை வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் திபெத்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் கோன்போ துண்டுப் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிராக சீனாவுக்கு எதிராகவும் இன்று டெல்லியில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியின் மஜ்னு கா தில்லா அருகே பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
போராட்டம் குறித்து பேசிய திபெத்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் கோன்போ, ஜி20 உச்சி மாநாடு இந்தியா நடத்துவதை நாங்கள் எதிர்க்கவில்லை. இந்த மதிப்புமிக்க ஜி20 கூட்டத்தை டெல்லியில் நடத்துவதில் நாங்கள் மிகவும் பெருமை படுகிறோம். ஆனால், எங்கள் எதிர்ப்பு சீன கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிரானதாகும்.
சீன அரசு எங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. தற்போது திபெத்திய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மேலும் இந்த எதிர்ப்புகளின் மூலம், சீனாவின் இராஜதந்திர உத்தரவாதங்களை நம்ப முடியாது என்பதை ஜி20 நாடுகளுக்கு நினைவூட்ட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய பாதுகாப்பிற்கு திபெத்தின் சுதந்திரம் அவசியம். சீனாவின் விரிவாக்கக் கொள்கை உலகம் முழுவதும் ஒற்றுமையையும் வன்முறையையும் உருவாக்குகிறது. நாம் ஒன்றுபட வேண்டும். சீன அதிபருக்கு இந்தியா வர தைரியமில்லை, சுதந்திர தேசத்தில் முகம் காட்ட தைரியமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட பகுதியில் டெல்லி காவல்துறை மற்றும் துணை ராணுவத்தினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.