வெங்காயத்திற்காக அடித்து கொண்ட மூன்று பெண்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பி உள்ளனர்.
சமீபத்தில் வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் வெங்காயம் கிடைப்பது மிகவும் சிரமமாக இருந்து வருகிறது. அத்துடன் சில இடங்களில் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டு மீட்கப்பட்டும் உள்ளது. இந்தச் சூழலில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் வெங்காயத்திற்காக மூன்று பெண்கள் சண்டையிட்டு கொண்டிருப்பது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா பகுதியில் நேற்று நேஹா என்ற பெண் வெங்காயம் வாங்க சென்றுள்ளார். அப்போது அவர் வெங்காயத்தின் விலை குறித்து பேரம் பேசியுள்ளார். இந்தச் சமயத்தில் அங்கு வந்த தீப்தி என்ற மற்றொரு பெண் வெங்காயம் விற்பவரிடம், “நேஹாவினால் வெங்காயம் வாங்க முடியாது. அவரது குடும்பத்தின் பொருளாதார சூழல் வெங்காயம் வாங்கும் அளவிற்கு இல்லை. ஆகவே அவரிடம் வெங்காயத்தை விற்று நேரத்தை வீணாக்காதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நேஹாவிற்கும் தீப்திக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளது. இந்த மோதலில் இவர்கள் இருவரின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்த நேஹா, தீப்தி மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த மூவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு அவர்களுக்கு ஜாமீன் கிடைத்ததை அடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.