இந்திய வான் எல்லையில் மூன்று சர்வதேச விமானங்கள் பெரும் விபத்தில் இருந்து மயிரிழையில் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியு ள்ளது.
நேஷனல் ஏர்வேஸ் என்ற விமானம் ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராமில் இருந்து ஹாங்காங் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அதே நேரத் தில் டச்சு நாட்டை சேர்ந்த கே.எல்.எம் விமானம், ஆம்ஸ்டர்டாமில் இருந்து பாங்காங்கிற்கு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், அப்போது பாங்காக்கில் இருந்து வியன்னாவுக்கு இவா என்ற விமானமும் சென்று கொண்டிருந்தது. இதில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.
இந்த மூன்று விமானங்களும் இந்திய வான் எல்லையின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது, ஆயிரம் அடி உயர வித்தியாசத்தில் நெருங்கி வந்து கொண்டிருந்தன. இதையடுத்து மோதும் நிலைக்குச் சென்றன.
உடனடியாக கவனித்த இந்திய வான் எல்லை கட்டுப்பாட்டு அதிகாரிகள் மூன்று விமானங்களுக்கும் எச்சரிக்கை செய்து, விமானம் பறக்கும் உயர அளவை மாற்றி அமைத்தனர். அதோடு விமான எச்சரிக்கை கருவியும் விமானிகளை எச்சரித்துள்ளது. இதனால் மயிரிழையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
கடந்த 23 ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் பற்றி விமான விபத்து விசாரணை ஆணையம், விசாரணையை தொடங்கியுள்ளது.