மகாரஷ்டிராவில் மொத்தமுள்ளா ஆறு பிராந்தியங்களில் 3 பிராந்தியங்கள் மிக முக்கியமகப் பார்க்கப்படுகின்றன. அவை எந்தெந்த பிராந்தியங்கள்? மக்கள் யாருக்கு வாக்களிக்க வாய்ப்புகள் அதிகம் என்பதைப் பார்க்கலாம்.
மராத்வாடா என்பது மராத்தி மொழி பேசும் மக்கள் வசிக்கும் இடம்.. மராத்வாடா பகுதியில் 46 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மக்களவைத் தேர்தலில் மனோஜ் ஜராங்கே பாட்டில் பிரச்சாரம் பாஜக கூட்டணிக்கு மிக எதிராக சென்றது. அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக தோல்வி அடைந்தது. மராத்தி இளைஞர்கள் பலரும் ஜராங்கேவை வழிகாட்டியாக கொண்டிருக்கின்றனர். மகாயுதி வேட்பாளர்களுக்கு எதிராக வாக்களியுங்கள் என்பதே ஜராங்கேவின் பரப்புரை சாரம். தற்போதும் அவரது பரப்புரை காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடிக்கு ஆதரவாக பார்க்கப்படுகிறது.
மராத்வாடா பகுதிகளில் உள்ள 46 தொகுதிகளில் 26 சட்டமன்ற தொகுதிகளில் மாராத்தி வேட்பாளர்களையே மகாயுதி கூட்டணி நிறுத்தியுள்ளது. உதாரணமாக விகி பாட்டீல், அசோக் சவான் மகள் ஸ்ரீ ஜெயா சவான், நித்தீஷ் ரானே போன்ற மிக முக்கிய வேட்பாளர்களை உதாரணமாக சொல்லலாம்.
மராத்வாடாவில் அதிகம் விவசாயம் சார்ந்த பகுதிகளே உள்ளன. இப்பகுதிகளில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை விட மிகக்குறைவாக கிடைக்கிறது. எனவே, விவசாயிகளும் ஆளும் தரப்பு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். அதுமட்டுமின்றி மராத்வாடா முழுவதிலும் தண்ணீர் மிக முக்கிய பிரச்னையாக உள்ளது. இதுவும் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விதர்பா பகுதி முழுக்க முழுக்க விவசாயிகளைக் கொண்ட பகுதியாகும். மொத்தம் 62 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இது 2014 தேர்தலுக்கு முன்பு வரை காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது. ஆனால், 2014 தேர்தல் மொத்ததையும் மாற்றியது. அப்போது, மோடி அலை எங்கும் வீசிக்கொண்டுருந்த நிலை. அப்போது மொத்தமுள்ள 62 தொகுதிகளில் 44 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. சிவசேனா 4 தொகுதிகளைக் கைப்பற்றியது, சுருக்கமாக சொன்னால், விதர்பா பிராந்தியத்தை பாஜக மொத்தமாக கைப்பற்றியது.
2019 ஆம் ஆண்டு இந்த நிலை சற்று மாறியது. பாஜக 29 தொகுதிகளையும், காங்கிரஸ் 15 தொகுதிகளையும் கைப்பற்றின. அதுமட்டுமின்றி விதர்பா பகுதி பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நடக்கும் பகுதியாக பார்க்கப்படுகிறது. உதாரணமாக, காங்கிரஸ் 102 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்றால், 40 வேட்பாளர்கள் விதர்பா பகுதியில் போட்டியிடுகின்றனர். பாஜகவும் 148 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்றால் அதில் 47 வேட்பாளர்கள் விதர்பா பகுதிகளில் போட்டியிடுகின்றனர். மேலும் காங்கிரஸும் பாஜகவும் 76 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது என்றால் அதில், 36 தொகுதிகள் விதர்பா பகுதிகளில் உள்ளன.
ஆளும் அரசை தீர்மாணிப்பதில், 11 மாவட்டங்களைக் கொண்ட விதர்பா பிராந்தியத்தை வெல்வது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மும்பை செல்ல வேண்டும் என்றால் விதர்பா மிக முக்கியமான கேட் வே.
மும்பை என்றால் அது சிவசேனாவின் கோட்டை. இந்த பகுதியில் வெல்வது என்பது யார் உண்மையான சிவசேனா என்பதை நிரூபிக்கும் ஒன்று. ஏனெனில் சிவசேனாவின் 58 ஆண்டுகால வரலாற்றில் தலைவர்கள் பலர் பிரிந்து போயிருந்தாலும், ஏக்நாத் ஷிண்டேவின் பிரிவு மிக பெரிய ஒன்றாக அமைந்தது. மும்பையில் ஷிண்டேவின் சிவசேனா 16 வேட்பாளர்களையும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 22 வேட்பாளர்களையும் நிறுத்தியுள்ளது. எம்.எல்.ஏக்கள் உத்தவ் தாக்கரேவை கைவிட்டாலும் தொண்டர்கள் உத்தவ் தாக்கரே பக்கம்தான் இருக்கின்றனர் என்ற பேச்சும் உள்ளது.