டெல்லியில் பத்திரிகையாளர்கள் 3 பேர் மீது தாக்குதல்!
வடகிழக்கு டெல்லியில் பத்திரிகையாளர்கள் 3 பேர் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது
இதழ் ஒன்றின் பத்திரிகையாளர்கள் 2 பேரும், புகைப்படக் கலைஞர் ஒருவரும் வடகிழக்கு டெல்லியில் உள்ள சுபாஷ் மோகல்லா பகுதிக்கு ஒரு செய்தி எடுப்பதற்காக சென்றுள்ளனர். அங்குள்ளவர்கள் அவர்களை சூழ்ந்து தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இது குறித்து தெரிவித்துள்ள பத்திரிகையாளர் ஒருவர், மசூதிக்கு அருகே காவி கொடிகள் பறக்கவிடப்பட்டதாக எங்களுக்கு தொலைபேசியில் தெரிவித்தனர். அது தொடர்பாகவே அங்கு செய்தி சேகரிக்க சென்றோம்.
அப்போது ஒருவர் எங்களை தடுத்தி நிறுத்தி விசாரித்தார். நாங்கள் விவரத்தை கூறினோம். எங்களுக்கு தொலைபேசியில் பேசிய நபருக்கு மீண்டும் அழைப்பு விடுக்கச் சொன்னார்கள், நாங்கள் முடியாது என்றும் கூறினோம். உங்களையும், தொலைபேசியில் பேசிய அந்த நபரையும் கொன்றுவிடுவேன் என அந்த நபர் மிரட்டினார். சிறுது நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் எங்களை சூழ்ந்துகொண்டனர். நேற்று மதியம் 2 மணி முதல் 3.30 மணி வரை அங்கேயே நின்றோம். ஒருவர் கேமராவை பிடிங்கி வீடியோ, போட்டோக்களை அழிக்க முயற்சித்தார். அவர்கள் எங்களை தாக்கினர். அப்போது போலீசார் வந்ததால் நாங்கள் மீட்கப்பட்டோம் எனத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தெரிவித்துள்ள போலீசார், அவர்கள் செய்தி சேகரிக்கச் சென்றுள்ளனர். அங்குள்ள மக்கள் கோபமடைந்து தாக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. உடனடியாக அவர்களை மீட்டுவிட்டோம். என்ன செய்தி சேகரிக்கச் சென்றார்கள் என்ற தகவல் எங்களிடம் இல்லை. விசாரணை நடைபெறுகிறது எனத் தெரிவித்துள்ளனர்