அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமி வளாகத்தை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. தரை தளத்தில் 160 தூண்கள், முதல் தளத்தில் 132 தூண்கள், இரண்டாம் தளத்தில் 74 தூண்கள் என பிரமாண்டமாக உருவெடுத்து வருகிறது அயோத்தி ராமர் கோயில். கோயில் வளாகத்தினுள் 5 மண்டபங்கள், அருங்காட்சியகம், ஆய்வு மையம், கலைக்கூடம், நிர்வாக கூடங்கள், பக்தர்களுக்கான அறைகள் மற்றும் ஒரு கால்நடைத் தொழுவம் உள்ளிட்ட வசதிகள் இந்த கோயிலில் அடங்கியுள்ளன. நடப்பாண்டின் இறுதிக்குள் அயோத்தி ராமர் கோயிலின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து, 2024 புத்தாண்டில் கோயில் தயாராகிவிடும்’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில் ராமஜென்ம பூமி வளாகத்தை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயோத்தியின் ராம்கோட் பகுதியில் வசித்து வரும் மனோஜ் என்பவரின் செல்போனுக்கு அழைத்த மர்ம நபர், ராமஜென்ம பூமி வளாகத்தை வியாழக்கிழமை (நேற்று) காலை 10 மணிக்கு தகர்க்கப் போவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். உடனே இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ராமஜென்மபூமி வளாகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் அனைத்தும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அத்துடன் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது. அதேநேரம், இந்த மிரட்டல் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ராமஜென்ம பூமி போலீசார், போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
முன்னதாக, அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு நேபாளத்தில் இருந்து அனுப்பப்பட்ட இரண்டு சாலிகிராம் கற்கள் நேற்று (வியாழக்கிழமை) வந்தடைந்தன. இந்த புனித கற்களை ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையிடம் ஒப்படைக்கும் முன்பாக ராமர் பிறந்த இடத்தில் மதகுருமார்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் பாறைகளை மாலைகளால் அலங்கரித்து பூஜைகள் செய்தனர். கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் முக்கிய வளாகத்தில் ராமர் மற்றும் ஜானகி சிலைகளை கட்டுவதற்கு இந்த பாறைகள் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.