கனமழை காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு, செல்லமுடியாத பக்தர்கள், ஆறு மாதத்திற்கு வேறு தேதி மாற்றி டிக்கெட் பெற்று தரிசனம் செய்யும் விதமாக, ஆன்லைனில் வசதி செய்யப்பட்டுள்ளது.
கனமழையால், திருப்பதி செல்லும் மலைப்பாதை மற்றும் கோவில் வளாகத்தில் வெள்ளம் சூழ்ந்த நிலையில், தற்போது, சீரமைப்புப் பணிகள் முடிவடைந்துள்ளன. இதனால் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு, நவம்பர் 18ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதிக்குள் வர முடியாதவர்கள், டிக்கெட் முன்பதிவை மாற்றிக்கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்பதிவிற்கான தேதியை 6 மாதங்களுக்குள் மாற்றிக்கொள்ள ஆன்லைனில் வசதி செய்து தரப்பட்டுள்ளது.
பக்தர்கள் தயக்கமின்றி திருமலைக்கு வந்து தரிசனம் செய்யலாம் என கூடுதல் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். நவம்பர் 25ஆம் தேதி முதல் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.