இந்தியாவில் ஜனாதிபதிக்கு அடுத்து இரண்டாவதாக சொந்த அஞ்சல் குறியீடு (பின்கோடு) கொண்டுள்ள சபரிமலை ஐயப்பனுக்காக சபரிமலையில் இயங்கிய தபால் நிலையம் இன்றுடன் (19.01.23) மூடப்படுகிறது.
சபரிமலை சன்னிதான தபால் நிலையம் 1963-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த தபால் நிலையத்தில் பயன்படுத்தப்படும் அஞ்சல் முத்திரையில் சபரிமலையின் 18-ம் படி மற்றும் ஐயப்பன் சிலை உலோகத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த உலோக அஞ்சல் முத்திரை 1974-ம் ஆண்டு முதல் சன்னிதானம் தபால் நிலையத்தில் அமலுக்கு வந்தது. நமது நாட்டில் இதுபோன்ற உலோகத்தாலான தனி அஞ்சல் முத்திரையை தபால் துறை வேறெங்கும் பயன்படுத்துவதில்லை.
இந்திய ஜனாதிபதிக்கு அடுத்து சபரிமலை ஐயப்பனுக்கு மட்டும் தான் தனி அஞ்சல் குறியீடான பின்கோடு எண்ணை இந்திய தபால் துறை வழங்கியுள்ளது. இதுபோன்று வேறு யாரும் தனி அஞ்சல் முத்திரையை பயன்படுத்த தபால்துறை அனுமதிப்பதில்லை. ஐயப்ப சுவாமியின் அஞ்சல் குறியீடு எண் 689713. இந்த அஞ்சல் குறியீட்டு எண்ணில் சபரிமலை சன்னிதான தபால் நிலையம் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக் காலமான 62 நாட்கள் மகர லக்னத்தில் மட்டும் இயங்கும். அதற்குப் பின் அஞ்சல் குறியீட்டு எண் செயலிழப்பு செய்யப்படும்.
இத்தனை சிறப்பு பெற்ற சபரிமலை சன்னிதானம் தபால் நிலையத்திற்கு தினமும் திரளான பக்தர்கள் வந்து, 18ம் படி மற்றும் ஐயப்பன் முத்திரையிடப்பட்ட கவர்களை வாங்கி தங்கள் வீடுகளுக்கும், அன்புக்குரியவர்களுக்கும் கடிதங்களாக அனுப்புகின்றனர். நினைவுக்காக பத்திரப்படுத்தவும் செய்கின்றனர்.
நிரந்தர பிரம்மச்சாரியாக விளங்கும் ஐயப்ப சுவாமிக்கு சந்தோஷம், சோகம், துக்கம், தீராத பிரச்னைகள், கவலைகள், காதல் என பல்வேறு உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் கடிதங்கள் இந்த சன்னிதான தபால் நிலையத்திற்கு வருகின்றன.
வீட்டில் நடக்கும் பல்வேறு வைபோகங்கள், விசேஷங்களுக்கு ஐயப்பனை அழைக்கும் முதல் அழைப்பிதழும் இங்கு வருகின்றன. ஐயப்பன் பெயரில் காணிக்கையாக மணியார்டர்களும் இந்த தபால் நிலையத்திற்கு வந்து கொட்டுகின்றன. இவை அனைத்தும் சன்னிதானத்தில் ஐய்யப்பனிடம் அளித்து நிவர்த்திக்காகவும், வாழ்த்துக்களுக்காகவும் பூஜிக்கப்படுகிறது.
கடிதங்கள் சபரிமலை செயல் அலுவலரிடம் ஒப்படைக்கப்படுறது. மணி ஆர்டர்கள் மூலம் வரும் பக்தர்கள் அனுப்பும் காணிக்கை பணம் தேவஸ்வம் போர்டின் ஐய்யப்பன் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காலம் இன்றோடு (ஜனவரி 19ம் தேதி) முடிவடைகிறது. இதையடுத்து இன்றோடு சிறப்பு தபால் நிலையமும் மூடப்படுகிறது.
இன்று மாலை தபால் நிலையம் மூடப்பட்டதும் ஐயப்பனின் உருவம் மற்றும் 18ம் படி பொறித்த சிறப்பு உலோக அஞ்சல் முத்திரை, பத்தனம்திட்டா அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலக லாக்கரில் வைத்து பாதுகாக்கப்படும். தொடர்ந்து, அடுத்த மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காலத்தில் மீண்டும் பயன்படுத்தப்படும்.