மனிதர்களின் ஆறாவது விரலாகவே செல்ஃபோன் போன்ற எலக்ட்ரானிக் கேட்ஜெட்கள் செயல்பட்டு வருகின்றன. மின்னணு சாதனங்கள் இல்லாத மனிதர்களை காண்பதே இந்த நவீன உலகில் அத்தகைய விந்தையாகவே இருக்கிறது.
ஆனால் உலகின் முதல் செல்ஃபோனை உருவாக்கிய மார்ட்டின் கூப்பரே தன்னுடைய ஒரு நாளில் வெறும் 5 சதவிகிதத்தை மட்டுமே செல்ஃபோன் பயன்படுத்துவதற்கு செலவழிப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆனால் சராசரி மனிதர் நாள் ஒன்றுக்கு குறைந்தது 5 மணிநேரம் செல்ஃபோன் பயன்படுத்துவதற்கு நேரம் செலவழிப்பதாக ஆய்வுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது.
இப்படி இருக்கையில், இந்தியாவின் மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தில் எலக்ட்ரானிக் சாதனங்களில் இருந்து விடுபட தினமும் ஒன்றரை மணிநேரத்தை தனியாக ஒதுக்குவதாகவும் அதனை தவறாமல் கடைபிடித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் உள்ள கிராமம்தா மோஹித்யாஞ்சே வத்காவோன். இங்குதான் தினந்தோறும் மாலை 7 மணி முதல் இரவு 8.30 மணிவரை கிராமத்தினர் எவருமே செல்ஃபோன், டிவி, டேப், லேப்டாப், கம்ப்யூட்டர் உள்ளிட்ட எந்த விதமான எலக்ட்ரானிக் கேட்ஜெட்களையும் பயன்படுத்தாமல் இருந்து வருகிறார்கள்.
இந்த ஒன்றரை மணிநேரத்தில் புத்தகம் படிப்பது, அக்கம்பக்கத்தினர் உடன் பேசி பழகுவது, பாட புத்தகங்களில் எழும் சந்தேகங்களை கேட்டறிந்துக்கொள்வது போன்ற வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.
இதற்காக மாலை 7 மணி ஆனதும் சைரன் ஒலி எழுப்பப்படும். அந்த ஒலி வந்ததும் கிராம மக்கள் அனைவரும் ஒன்றினைந்து எந்த மின்னணு சாதனங்களையும் பயன்படுத்தாமல் இருப்பார்கள். அதன் பிறகு சரியாக இரவு 8.30 மணி ஆனதும் மீண்டும் சைரல் ஒலி எழுப்பப்படும். அப்போது எல்லாரும் தங்களுடைய செல்ஃபோன் உள்ளிட்டவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இது தொடர்பாக பேசியிருக்கும் கிராம பஞ்சாயத்து தலைவர் விஜய் மோஹிதே, “இந்த நடைமுறை சமூக ஊடகங்களில் மக்கள் மூழ்கிக் கிடப்பதை தடுக்க உதவுகிறது. இதனால் நல்ல விதமான செயல்பாடுகளில் ஈடுபட்டு அந்த ஒன்றரை மணிநேரத்தை அர்த்தமுள்ள வகையில் செலவிட்டு வருகிறார்கள்” எனக் கூறியுள்ளனர்.