ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, வறட்சி உள்ளிட்டவற்றை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ஐந்தாவது நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றனர். மம்தா பானர்ஜி, சந்திரசேகர ராவ், அமரீந்தர் சிங் ஆகியோர் பங்கேற்கவில்லை. இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி 2022 ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மத்திய அரசின் விவசாய நலத்திட்டங்கள் குறிப்பிட்ட நேரத்தில் விவசாயிகளை சென்று சேர வேண்டும் என்றும் ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, வறட்சி உள்ளிட்டவற்றை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் வரும் 2024 ஆம் ஆண்டுக்குள், 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவிலான வளர்ந்த பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவதே இலக்கு என்றார். மேலும் இந்த சவாலை, மாநிலங்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் அடையலாம் எனவும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜலசக்தி துறை அமைச்சகம், தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட விவகாரத்தில் ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்க உதவும் எனவும் பிரதமர் தெரிவித்தார். இதேபோல், நீர் மேலாண்மை மற்றும் சேமிப்பில் மாநில அரசுகளும் அக்கறை காட்ட வேண்டும் என்று தெரிவித்த அவர், கிராமப் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் வரும் 2024ஆம் ஆண்டுக்குள் குழாய்கள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.