என் வாழ்வில் நடந்த இரண்டாவது திருப்புமுனை பாஜகவில் இணைந்துதான் என்று காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா இன்று டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தார். அத்துடன் பாஜகவில் அவர் தன்னை இணைத்துக்கொண்டார். அவரை ஜே.பி.நட்டா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். கட்சியில் இணைந்தப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சிந்தியா, தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டு இடம்கொடுத்த பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிராதித்ய சிந்தியா, " மக்களுக்காக சேவை செய்ய வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த என்னால் அதனை நிறைவேற்ற முடியவில்லை, இதற்கு அந்தக் கட்சிதான் காரணம். இப்போது இருக்கும் காங்கிரஸ் கட்சி முன்பு இருந்தது போல இல்லை. என் வாழ்க்கையில் இரண்டு திருப்புமுனைகள் நடந்துள்ளது. அதில் முதலாவது என் தந்தையின் மரணம். இரண்டாவது இப்போது பாஜகவில் இணைந்தது" என தெரிவித்துள்ளார்.
சிந்தியா பாஜகவில் இணைந்தது குறித்து மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், “பாஜகவுக்கு இது மகிழ்ச்சியான நாள். தனிப்பட்ட வகையில் எனக்கும்தான். இன்று, ராஜ்மாதா சிந்தியாவை நினைவு கூர்கிறேன். ஜோதிராதித்ய சிந்தியா தற்போது பாஜக குடும்பத்தில் உறுப்பினர் ஆகியுள்ளார். யசோதாரா எங்களுடன் தான் இருக்கிறார். ஒட்டுமொத்த சிந்தியா குடும்பமும் பாஜகவில்தான் உள்ளது. அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்யத்தான் என பாரம்பரியம் அவர்களுக்கு உள்ளது” என்றார்.