கேரளாவை சேர்ந்த சிறுவன் ஒருவர் நடிகர் மோகன்லால் படத்தைப் பார்த்து அதைப்போன்ற ஒரு குட்டி ஜீப்பை உருவாக்கியுள்ளார்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள அஞ்சல் நகரத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவர் அச்சு அசல் ஒரு ஜீப்பை அப்படியே குட்டியாக தயாரித்திருக்கிறார். இதில் ஆச்சரியம் என்ன என்றால் இவருக்கு 10 வயதுதான் ஆகிறது. மலையாளத்தில் மோகன் லால் நடித்த லூசிஃபர் படத்தினைப் பார்த்து அதன் பாதிப்பால் இந்தக் குட்டி ஜீப்பை உருவாக்கியிருக்கிறான் இந்தச் சிறுவன். இது ஒரு Sport utility vehicle எனக்கூறலாம். அதாவது குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட வாகனம்.
இதை எப்படி உருவாகினார் என்பதை இந்தச் சிறுவன் விளக்கமாக ஒரு வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். அதனை அவர் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். அதனைப் பார்த்த இணையதளவாசிகள் அதனை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
அந்த வீடியோவில் இந்தக் குட்டி ஜீப்பை உருவாக்க தனக்கு எட்டு மாதங்கள் வரை தேவைப்பட்டதாக கூறியுள்ளார் அருண்குமார். மேலும் இதன் ஒட்டுமொத்த எடை சுமார் 75 கிலோ என்றும் இந்த வாகனம் தனது எடை அளவைவிட இரண்டு மடங்கு அதிக எடையை இழுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த மினியேச்சர் காரில் பொருத்தப்பட்ட எலக்ட்ரிக் மோட்டாரை சார்ஜ் செய்ய இரண்டு 24 வேல்டேஜ் டிசி பேட்டரிகளைப் பயன்படுத்தி இருப்பதாகவும் கூறியுள்ளார். வழக்கமாக பெரிய வாகனத்தில் உள்ள அதனைத்தும் இதில் உள்ளன. கியர் பயன்பாடுகூட அதேபோன்றே அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த வாகனத்தை எளிய முறையில் சிறுவர்கள் உட்கார்ந்து பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.