தாய்மை என்பது அழகானது; அர்த்தம் நிறைந்தது. தாயன்பு நிபந்தனையற்றது, தன்னலமில்லாதது. அது ஒரு வரம் என்று சொன்னால் மிகையாகாது. அதிலும், தன் குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியையும் பார்த்து அகமகிழ்வதில் அன்னைக்கு இணையாய் வேறொரு உயிர் ஏது? அப்படிப்பட்ட தாய்மைக்கு வாழ்க்கை ஒரு பகுதியுமாக, மற்றொரு பகுதியாக பணியும் இருந்தால் அந்தப் பெண் சுமக்கும் வலிகளும், சுமைகளும் கொஞ்சநஞ்சமல்ல.
சாதாரணமாக இருக்கும் பெண்மணிக்கே, ஒரு குழந்தையைக் கவனிப்பதற்கே நேரம் சரியாக இருக்கும் நிலையில், கூடுதலாக கவனம் ஈர்க்கும் பொறுப்புமிகுந்த பணியையும் நிர்வகிக்கும் பெண்களுக்கும் இவை இரண்டையும் கவனிப்பது என்பது எல்லோருக்கும் சவாலான விஷயமே. அந்த வகையில்தான் இந்த திருவனந்தபுரம் இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரன், ’இளங்கன்று பயமறியாது’ என்பதற்கு ஏற்றாற்போல், எதையும் சமாளிப்போம் என்ற எண்ணத்தில் இரண்டிலும் திறம்படச் செயலாற்றி வருகிறார். அத்தகைய படம்தான் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
24 வயதான ஆர்யா ராஜேந்திரன், கடந்த 2020ஆம் ஆண்டு, தனது 21வது வயதில் நாட்டின் இளம்மேயராகப் பதவியேற்றார். கேரள சட்டசபையில் அங்கம் வகிக்கும் சிபிஐ(எம்) எம்எல்ஏவான சச்சின் தேவ் என்பவரை கடந்த ஆண்டு 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் ஆர்யா ராஜேந்திரன், திருவனந்தபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் பணியாற்றும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. காரணம், அந்த புகைப்படத்தில் அவரது குழந்தை தூங்கிக் கொண்டிருக்க, ஆர்யா கோப்புகளில் எழுதிக்கொண்டிருக்கிறார். இதற்கு நெட்டிசன்கள் கமெண்ட்களையும் லைக்குகளையும் அள்ளி வீசி வருகின்றனர்.
குறிப்பாக, ’வேலை மற்றும் வாழ்க்கை ஆகிய இரண்டிலும் சரியான சமநிலையுடன், திறமையுடன் சிரமமின்றி நிர்வகிக்கும் முன்னோடி பெண்’ எனப் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர், ’தாய்மை, ஒரு பெண்ணின் தொழில், லட்சியங்களுக்கு எந்த வகையிலும் இடையூறாக இருக்காது என்பதற்கு சான்றாக அவரது செயல்கள் இருக்கின்றன’ எனப் பாராட்டி வருகின்றனர்.
அதேநேரத்தில், இந்தப் படத்திற்கு எதிராக எப்போதும்போல சில எதிர்ப்புகளும் வந்து நிற்கத்தான் செய்கின்றன. தாய்மை என்பது ஒரு மதிப்புமிக்க வைரம் போன்றது; அது, எப்போதும் தன் மதிப்பை இழப்பதில்லை. அது, மேயர் ஆர்யா ராஜேந்திரனிடத்தும் நிறைந்து கிடக்கிறது.