உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாம் கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியது.
403 தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக கடந்த 11 ஆம் தேதி 15 மாவட்டங்களை சேர்ந்த 73 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டமாக 15 ஆம் தேதி 15 மாவட்டங்களை சேர்ந்த 67 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து இன்று மூன்றாம் கட்டமாக 69 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. மொத்தமாக 2 கோடியே 41 லட்சம் பேர் இன்று தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய உள்ளனர். கான்பூர், லக்னோ, பாராபங்கி, சீதாப்புர், கன்னோஜ் உள்ளிட்ட மாவட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான சூழ்நிலைகள் நிலவும் பகுதிகளில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.