இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படாது என்றும், இது குறித்து மக்கள் கவலை கொள்ளத் தேவையில்லை என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் பொருட்டு நாடுமுழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியத் தேவைகளான எரிவாயு சிலிண்டர் மற்றும் வாகனங்களுக்குத் தேவையான பெட்ரோல், டீசல் போன்றவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்படாது என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள காலத்தை விட அதிகமான நாள்களுக்கு தேவையான எரிவாயு சிலிண்டர், டீசல் மற்றும் பெட்ரோல் கையிருப்பு உள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 979ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 87 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் கூறியுள்ளது. மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மொத்தம் 186 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 182 பேரும், கர்நாடகாவில் 76 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.