2002ம் ஆண்டு குஜராத்தில் நாசப்படுத்தப்பட்ட கோயில்களையும் மசூதிகளையும் மறுசீரமைப்பதற்காக மாநில அரசு இழப்பீடு தர வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வழிபாட்டிடங்களை சீரமைக்க பொதுமக்களின் வரிப்பணத்தை செலவிடக் கூடாது என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர். எனினும் நாசமாக்கப்பட்ட வீடுகளுக்கு வழங்கியதை போல் கோயில்களுக்கும் மசூதிகளுக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்ற குஜராத் அரசின் திட்டத்தை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து அங்கு கலவரம் மூண்டது. இதனைத்தொடர்ந்து அங்குள்ள வீடுகள், பொதுச் சொத்துகளுடன் கோயில்கள், மசூதிகளும் சூறையாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.