காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வளர்ச்சி பற்றிய செய்திகள் இல்லாமல், வெறும் சண்டைகள் மட்டுமே இருப்பதாக இமாச்சல் பிரதேச தேர்தல் பரப்புரையில் பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
இமாச்சல் பிரதேச தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி கலந்துகொண்டுள்ளார். காங்க்ராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “காங்கிரஸ் கட்சி 2 இடங்களில் மட்டுமே ஆட்சியை பிடித்து தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய 2 மாநிலங்களிலும் வளர்ச்சி என்பதையே பார்க்க முடியவில்லை, வெறும் சண்டைகளை மட்டுமே காணமுடிகிறது. ஊழல் மற்றும் மோசடிகளுக்கு காங்கிரஸ் தான் உத்தரவாதம் என குற்றம் சாட்டிய பிரதமர், காங்கிரஸ் கட்சியால் இமாச்சல் பிரதேசத்தில் ஒரு நிலையான ஆட்சியை கொடுக்கவே இயலாது” என கூறினார்.
மேலும் காங்கிரஸ் அரசாங்கத்தால் நமது நாட்டில் பெண்கள், சகோதரிகள், மகள்கள் பல சகாப்தங்களாக மிகவும் புறக்கணிக்கப்பட்டதாக விமர்சனம் செய்தார்.
பின்னர், “இமாச்சல பிரதேசத்திற்கு நிலையான மற்றும் வலுவான அரசாங்கம் தேவை. இமாச்சலப் பிரதேசம் வலுவான அரசாங்கத்தையும் இரட்டை இயந்திர சக்தியையும் பெற்றால், அது அனைத்து சவால்களையும் கடந்து புதிய உயரங்களை எட்டும். பா.ஜ.க.வின் இந்த 11 நல்ல தீர்மானங்கள் இமாச்சல் பிரதேசத்தில் வளர்ச்சியை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும்” என்று உறுதி கூறினார்.