சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை நடைபெறவுள்ளதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி சபரிமலை கோவிலின் நடை திறக்கப்பட்டது. கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் பெற்றப்போதிலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி சபரிமலை கோவிலுக்கு சென்ற பெண்கள் பலர் போராட்டக்காரர்களால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். பக்தர்கள் போராட்டம் காரணமாக அங்கு அவ்வப்போது பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் நடப்பு ஆண்டின் மண்டல பூஜை இன்று இரவு 10 மணிக்கு நடைபெறவுள்ளது. மண்டல பூஜைக்கு பின்னர் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. அதனைதொடர்ந்து ஜனவரி 14ஆம் தேதி நடைபெறும் மகரவிளக்கு பூஜைக்காக வரும் டிசம்பர் 30ஆம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படவுள்ளது. இதனால் பக்தர்கள் வசதிக்காகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் இடுக்கி மற்றும் பத்தனம்திட்ட மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 10 வயதிற்கும் 50 வயதிற்கும் இடப்பட்ட வயது பெண்கள் இன்னும் தரிசனம் செய்யவில்லை. மேலும் இந்த மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காலம் முடிந்ததும் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மறு சீராய்வு மனுக்களை, வரும் ஜனவரி 22ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.