மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஹரியானா, கர்நாடகா மற்றும் அசாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் 'லவ் ஜிஹாத்'-க்கு எதிராக சட்டம் இயற்ற்றுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன அந்த மாநிலங்களை ஆட்சி செய்து வரும் பாரதிய ஜனதா கட்சியின் அரசுகள்.
இந்தச் சட்டம் மூலமாக லவ் ஜிஹாத் எனும் பெயரில் கட்டாயத் திருமணம் செய்யும் குற்றவாளிகளுக்கு 5 ஆண்டுகள் கடுமையான சிறைத் தண்டனை மற்றும் பிணையில் வெளிவரமுடியாத சிறை என்னும் வகையில் சட்டம் இயற்றப்படும் என சொல்லப்படுகிறது.
“பாஜக தலைவர்களின் வீட்டிலும் மதங்களை கடந்த திருமணங்கள் நடந்துள்ளன, அது லவ் ஜிஹாத்தில் சேராதா?” என கேள்வி எழுப்பியுள்ளார் சட்டீஸ்கர் மாநில முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகல்.
லவ் ஜிஹாத்திற்கு எதிரான சட்டம் குறித்து ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
“திருமணம் என்பது தனிநபர் சுதந்திரம் சார்ந்தது. அதனைத் தடுக்க சட்டம் இயற்றுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது, எந்த நீதிமன்றமும் இதை ஏற்காது. காதலில் ஜிஹாத்திற்கு இடமில்லை. லவ்ஜிஹாத் என்பது நாட்டைப் பிளவுபடுத்தவும், சமூக நல்லிணக்கத்தை சிதைக்கவும் பாஜக உருவாக்கிய வார்த்தை” என அவர் சொல்லியிருந்தார்.