இந்தியாவில் கிராமத்தில் உள்ள பள்ளிகளில் கல்வித்தரம் மிக மோசமான நிலையில் இருப்பதாக உலக வங்கி கவலை தெரிவித்து உள்ளது.
'கல்வி மீதான வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான கற்றல் உலக மேம்பாட்டு அறிக்கை 2018' என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை உலக வங்கி வெளியிட்டது. இதில் இந்தியா உள்ளிட்ட 12 நாடுகளில் 2ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த நாடுகள் எல்லாவற்றிலுமே கிராமப்புறங்களில் தொடக்க நிலை மற்றும் மேல்நிலை கல்வி இரண்டுமே மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளதாக உலக வங்கி கவலை தெரிவித்துள்ளது.
உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராமப்புறங்களில் கல்வியின் நிலை மோசமாக உள்ளது. 3ஆம் வகுப்பு படிக்கும் மூன்றில் ஒரு பங்கு மாணவர்களுக்கு, எளிமையான கணக்கைக் கூட சரிவர செய்ய முடியவில்லை. 12 நாடுகளின் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் இந்தியாவில், 2ஆம் வகுப்பு படிக்கும் மாணவனால் இரண்டு இலக்க எண் கொண்ட கழித்தல் கணக்கை செய்ய முடியவில்லை. பள்ளிக்கூடங்களில் சேர்ந்து பல ஆண்டுகள் ஆகியும், பல லட்சம் மாணவர்களுக்கு சரிவர எழுத, படிக்க தெரியவில்லை. குறிப்பாக அடிப்படை கணிதத்தில் மிகவும் பலவீனமாக உள்ளனர். இந்தியா கிராமத்தில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டால், அவர்களால் 2ஆம் வகுப்பு பாடத்தை மட்டுமே நன்கு வாசிக்கவோ, எழுதவோ முடிகிறது. அதுவும் எளிமையான வார்த்தைகள் என்றால்தான் சுலபமாக படிக்கிறார்கள் என்று கூறிப்பிட்டுள்ளனர்.
இதுபற்றி கருத்து தெரிவித்த உலக வங்கி குழு தலைவர் ஜிம் யோங் கிம், இந்தியாவில் கல்வித்தரம் மோசமாக உள்ளது. வருங்காலத்தில் இந்தியாவில் பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவை பெரிதும் பாதிக்கப்படும் நிலை உருவாகலாம் என்று கவலை தெரிவித்துள்ளார்.