விண்ணைதொட்டு நின்ற நொய்டா இரட்டை கோபுரங்கள் 9 விநாடிகளில் தூள் தூளானது! வீடியோ

விண்ணைதொட்டு நின்ற நொய்டா இரட்டை கோபுரங்கள் 9 விநாடிகளில் தூள் தூளானது! வீடியோ
விண்ணைதொட்டு நின்ற நொய்டா இரட்டை கோபுரங்கள் 9 விநாடிகளில் தூள் தூளானது! வீடியோ
Published on

விதிகளைப் புறக்கணித்து நொய்டாவில் கட்டப்பட்ட பிரமாண்ட இரட்டை கோபுரங்கள் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு திட்டமிட்டபடி வெடிவைத்து தகர்க்கப்பட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் 'சூப்பர் டெக்' என்ற நிறுவனத்தின் சார்பில் பிரமாண்ட இரட்டைக் கோபுர குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதில் 'அபெக்ஸ்' என்ற கோபுரம், 32 மாடிகளை உடையது. இதன் உயரம் 328 அடி. மற்றொரு கோபுரமான 'சியான்' 31 மாடிகளை உடையது; இதன் உயரம் 318 அடி.

இந்த இரட்டை கோபுரங்கள் விதிமுறையை மீறி கட்டப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டதைத் தொடர்ந்து, அவ்விரு கட்டடங்களையும் இடித்துத் தள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இடிப்புக்கு விதிக்கப்பட்ட கெடு பல காரணங்களால் நீட்டிக்கப்பட்டது. இறுதியாக, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த இரட்டை கோபுரங்களானது இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு வெடிவைத்துத் தரைமட்டமாக்கப்பட்டது. கட்டடங்களைத் தகா்ப்பதற்கான பணிகளை எடிஃபிஸ் என்ஜினியரிங் நிறுவனம் மேற்கொண்டது.

இதையடுத்து, இந்த கோபுரங்களை இடிக்க, 3,700 கிலோ வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட்டன. இதற்காக 20 ஆயிரம் இணைப்புகள் இந்த கட்டடத் தூண்களுக்கு இடையே கொடுக்கப்பட்டன. இதனை வெடிக்கச் செய்வதன் மூலம் இரட்டைக் கோபுரங்களும் 9 வினாடிகளில் தரைமட்டமானது. ‘வாட்டர்ஃபால் இம்லோஷன்’ என்ற தொழில்நுட்பம் மூலம் தகர்க்கப்பட்டது. வெடிபொருட்கள் வெடித்ததும் நீர்வீழ்ச்சி விழுவதுபோல் சில நிமிடங்களில் இந்த இரட்டை கோபுரம் சரிந்து தரைமட்டமானது. அதாவது, கட்டடம் இடிந்து விழும்போது வெளிப்புறத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதவண்ணம் உள்புறமாகவே விழுந்ததாக தெரிவித்துள்ளனர் கட்டடப் பொறியாளர்கள்.

அனைத்து இறுதிக்கட்டப் பணிகளும் நிறைவடைந்தபின், 100 மீட்டர் தொலைவிலிருந்து ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் கட்டடத்தை தரைமட்டமாக்கும் பணி திட்டமிட்டபடி நடைபெற்றது. அருகில் இருக்கும் கட்டடங்கள் துணியால் மூடப்பட்டு தூசுகள் படியாத வகையில் பாதுகாக்கப்பட்டன. தகர்ப்பு பணிகளில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த இடிப்பால் குவியும் கட்டடக் கழிவுகளை அகற்ற மூன்று மாதங்களுக்கு மேல் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஒட்டுமொத்த இடிப்புப் பணிகளுக்கும், 20 கோடி ரூபாய் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டடங்கள் இடிக்கப்பட உள்ள நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நொய்டா நிா்வாகம் மேற்கொண்டது. எமரால்ட் கோர்ட் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், அவர்களின் செல்ல பிராணிகளுடன் இன்று காலை 7 மணிக்குள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது அங்கிருந்த 2,500 வாகனங்களும் அப்பபுறப்படுத்தப்பட்டன. மாலை 5.30 மணிக்கு மேல் குடியிருப்புவாசிகள் மீண்டும் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர். இரட்டை கோபுர கட்டிடத்தை சுற்றி 500 மீட்டர் தூரத்துக்கு வெடிகுண்டு நிபுணர்களை தவிர யாரும் தற்போதுவரை அனுமதிக்கப்படவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com