தெலங்கானா இளைஞர் ஆணவக்கொலைக்கு காரணமான அம்ருதா தந்தைக்கு ஜாமீன்

தெலங்கானா இளைஞர் ஆணவக்கொலைக்கு காரணமான அம்ருதா தந்தைக்கு ஜாமீன்

தெலங்கானா இளைஞர் ஆணவக்கொலைக்கு காரணமான அம்ருதா தந்தைக்கு ஜாமீன்
Published on

ஆணவக்கொலை வழக்கில் கைதாகி சிறையிலிருந்த மாருதி ராவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் மிரியல்குடாவைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் மாருதிராவ். இவரது ஒரே மகள் அமிருதா என்ற அமிர்தவர்ஷினி. ஹைதராபாத்தில் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றினார். அப்போது உடன் பணியாற்றிய பிரனாயி என்பவரைக் காதலித்தார். அவரை திருமணம் செய்துகொள்ளும் ஆசையை, தந்தை மாருதி ராவிடம் தெரிவித்துள்ளார். 

பிரனாயி, பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் திருமணத்துக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரனாயி வீட்டில் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து வீட்டை மீறி பிரனாயியை திருமணம் செய்துகொண்டார், அமிருதா. இருவரும் தனியாக வசித்து வந்தனர். அமிருதா கர்ப்பமானார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி, அவரும் பிரனாயும் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவனை சென்றுவிட்டுத் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். 

அப்போது பின்னால் வந்த கூலிப்படையினர் பிரனாயியை, நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்தனர். இந்தச் சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது ஆணவக் கொலை என்பது பின்னர் தெரியவந்தது. 

இக்கொலை வழக்கில், அமிருதாவின் தந்தை மாருதிராவ் மற்றும் அவர் உறவினர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்தத் திருமணம் பிடிக்காததால், கூலிப்படை மூலம் பிரனாயியை கொலை செய்ததாக, மாருதி ராவ் ஒப்புக் கொண்டார். இதையடுத்து குற்றவாளிகள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். 

இந்நிலையில் மாருதி ராவ் உள்ளிட்ட குற்றவாளிகள் ஜாமீன் கோரி தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மாருதி ராவ் மற்றும் அவரது சகோதரர் சரவணக்குமார் உள்ளிட்டோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்து நலகொண்டா எஸ்.பி ஏவி ரங்கநாத் கூறுகையில், உயர்நீதி மன்றத்தின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம் எனத் தெரிவித்தார். இதுகுறித்து பிரனாயின் தந்தை பாலசாமி கூறுகையில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவு அதிருப்தி அளிப்பதாகவும் நாங்கள் நீதிபதி உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வோம் எனவும் தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com