தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இன்று முதல் 4 நாட்கள் தடுப்பூசி திருவிழா நடத்தப்படுகிறது. தமிழகத்தில் நாள்தோறும் 2 லட்சம் ஊசிகள் போடுவதற்கு சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. இதையடுத்து முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் 4 நாட்கள் கொரோனா தடுப்பூசி திருவிழா நடத்துவதற்கு வேண்டுகோள் விடுத்தார். இதன்படி, இதன்படி தமிழகத்தில் இன்று முதல் வரும் 4 நாட்களுக்கு தடுப்பூசித் திருவிழா நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் ஜனவரி 16 ஆம் தேதி 600 மையங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கின் படி தற்போது வரை ஒரு கோடியே 39 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், 37,32,000 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் தடுப்பூசி திருவிழா காலத்தில், தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு தமிழக சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் நிலையில், நாள்தோறும் 2 லட்சம் பேருக்கு ஊசி போடுவதற்கு தமிழக சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், நகர்புற மற்றும் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட 1900 மினி கிளினிக்குகள், தடுப்பூசி செலுத்த அனுமதி பெற்ற தனியார் மருத்துவமனைகள் என 4,328 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. அதிக நபர்கள் பணியாற்றும் தொழில் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றிலும் தடுப்பூசி முகாம்களை தேவைக்கேற்ப நடத்த சுகாதாரத்துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. விருப்பமுடைய நிறுவனங்கள் மற்றும் குடியிருப்போர் நல சங்கங்கள் உள்ளாட்சித் துறை அதிகாரிகளை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 45,05,800 கோவிஷீல்டு மருந்தும், 7,67,520 கோவாக்சின் மருந்தும் வந்துள்ளன. தற்போது, 18 லட்சம் டோஸ் மருந்துகள் கையிருப்பில் உள்ளன.