புதுச்சேரியில் வறட்சி பாதித்த பகுதிகளில் மத்தியக்குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
புதுச்சேரியில் சராசரியாக பெய்ய வேண்டிய பருவ மழை, மூன்றில் ஒரு பங்குக்கூட பெய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டன. இழப்பீடு வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மாநில அரசு சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது.
அதில், 100 கோடிக்கு மேல் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டது. அதையடுத்து முதலமைச்சர் நாராயணசாமியின் வலியுறுத்தலின் பேரில், மத்திய வேளாண் துறை இணைச் செயலாளர் ராணி தலைமையிலான மத்திய குழுவினர் புதுச்சேரியில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். பத்துக்கண்ணு, காட்டேரிக்குப்பம், சோரப்பட்டு உள்ளிட்ட பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிட்டு, விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர். மத்திய அரசு அதிகாரி பொன்னுசாமி தலைமையிலான மற்றொரு குழுவினர், காரைக்கால் மாவட்டத்திலுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்தக் குழு மத்திய அரசிடம் வறட்சி குறித்த ஆய்வு அறிக்கைகளை மத்திய அரசிடம் வழங்கும்.